Thiruchchikkaaran's Blog

தலித் ஒருவர், சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் – 2

Posted on: March 3, 2010


தலித் ஒருவர் சங்கராச்சரியாவாரா, என்ற ஒரு கேள்வி அவ்வப் போது எழுப்பப் பட்டு வருகிறது. தலித் ஒருவர் சங்கராச்சாரியாராக வேண்டும் என்று கூறப்படுவது ஏன், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஏன்?

தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள் முன்னேற அரசாங்கம் பல திட்டங்களை தீட்டி செயல் படுத்தி வருகிறது.  தலித் பிரிவினர் அரசுப் பணிகளில் முக்கிய பதவி வகிப்பதோடு, முதல் அமைச்சர் பொறுப்பிலும் இருக்கின்றனர்.  ஆனால் இன்னும் பல கிராமப் பகுதிகளில் தலித்துகள் தனியாக வாழும் சூழல் உள்ள நிலையில் தலித்துகள் முன்னேறவும், சமத்துவ   சமுதாயம் அமையவும் பல முனைகளிலும் நாம் உழைக்க வேண்டியுள்ளது.

இந்தக் கால கட்டத்திலே தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக வேண்டியது அவ‌சிய‌மான‌ ஒன்றா எனில், அது மிக‌ அவ‌சிய‌மான‌ ஒன்றாக‌வே க‌ருத‌ப் ப‌டுகிற‌து.

ச‌முதாய‌த்தில் ம‌க்க‌ள் ப‌ல‌ருக்கும் ம‌திப்புக் கொடுக்கின்ற‌ன‌ர். ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுக்கின்ற‌ன‌ர், அர‌சு அதிகாரிக‌ளுக்கு ம‌திப்புக் கொடுக்கின்ற‌ன‌ர்,அரசிய‌ல்வாதிக‌ளுக்கு ம‌திப்பு கொடுக்கின்ற‌ன‌ர்.

ஆனால் அமைதியையே அணிக‌ல‌னாக‌ உடைய‌ ஒரு ஆன்மீக‌வாதிக்கு அவ‌ர்க‌ள் கொடுக்கும் ம‌திப்பு அலாதியான‌து.  ஒரு உண்மையான‌ ஆன்மீக‌வாதியை ச‌ந்திக்கும் போது,   ம‌க்க‌ள் ம‌ன‌தில் ம‌ன‌தில் ந‌ம்பிக்கை (confidence) பிற‌க்கிர‌து.  த‌ங்க‌ளைப் போல‌ இந்த‌ உல‌க‌ப் பொருட்க‌ளில் ஆசை கொண்டு அவ‌திப் ப‌டாம‌ல், ம‌ன‌தில் அன்பை நிறுத்திய‌ ஆன்மீக‌ வாதியைக் காணும் போது,   அவ‌ர்க‌ள் தாமாக‌வே ம‌ன‌ம் ஒப்பி தாழ‌ப் பணிகின்ற‌ன‌ர். ஒரு மாபெரும் ச‌க்க‌ரவ‌ர்த்தியின் எண்ண‌த்தையே மாற்றி அவ‌ரை அமைதிப் பாதைக்கு, அன்புப் பாதைக்கும் திருப்பும் வ‌ல்ல‌மை உடைய‌வையாக‌ இருந்திருக்கின்ற‌ன ஒரு ஆன்மீக‌ வாதியின் க‌ருத்துக்க‌ள். என‌வே அத்த‌கைய‌ ஆன்மீக‌ துறையில் த‌லித் பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் முன்னேறி முக்கிய‌ ப‌ங்கு வ‌கிப்ப‌து, மிக‌ அவ‌சிய‌மான‌தாகிற‌து.

                          

இதிலே ச‌ங்க‌ராச்சாரியார் என்கிற‌ ஒரு நிலையான‌து ஏன் அவ்வ‌ளவு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தாக‌க் க‌ருத‌ப் ப‌டுகிற‌து? ஆதி ச‌ங்க‌ராச்சாரியார் என்ப‌வ‌ர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த‌ அறிஞ‌ர் ஆவார். இவ‌ருடைய‌ த‌த்துவ‌மும் ப‌ணியும் இந்து ம‌த‌த்தில் மிக‌ முக்கிய‌மாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.  இந்திய‌ ஆன்மீக‌த்தில், ச‌முதாய‌த்தில் இவ‌ருக்கு இணைய‌ற்ற‌ இட‌ம் அளிக்க‌ப் ப‌ட்டு இருக்கிற‌து.

ஆன்மீக‌த்திலே இவ‌ருடைய‌ சித்தாந்த‌ம் என்ன‌ என்றால் எல்லா  ஜீவ‌ராசிக‌ளின் உயிராக‌வும் இருப்பது ஒன்றேதான் என்ப‌துவே இவ‌ருடைய‌ முக்கிய‌மான‌ சித்தாந்த‌ம். அப்ப‌டி எல்லா உயிராக‌வும் இருக்கும் ஒரே பொருள் மட்டுமே நிலையான‌து, அழிவ‌ற்ற‌து, ம‌ற்ற‌ எல்லா பொருள்களும் வெறும் தோற்ற‌மே என்ப‌தும் இவ‌ரது உறுதியான கோட்பாடு. இந்தத் த‌த்துவ‌த்தை அனுப‌வ‌ பூர்வ‌மாக  உண‌ர்ந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌த‌ற்கு இவ‌ர் முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து இருக்கிறார்.  

இதை உணரும்போது தான் ஒரு மனிதன் விடுதலை  பெற்ற நிலையை அடைவதாகவும்   சங்கரர் கூறினார். 

எனவே எவ‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌டுமையான‌ உழைப்பினாலும், க‌ட்டுப்பாடான‌ வாழ‌க்கையினாலும், த‌ன்னுடைய‌ ம‌ன நிலையை உய‌ர்த்தி எல்லா உயிர்க‌ளிலும் த‌ன் உயிரையே காணும் அன்பு நிலையை அடைகிறாரோ அவ‌ரே ச‌ங்க‌ராச்சாரியார‌க‌ க‌ருத‌ப் ப‌ட‌ முடியும்.

ஆதிச‌ங்க‌ரர் வாழ்ந்த  காலம் முப்பத்து  இரண்டு வருடங்கள் மாத்திரமே. இந்த குறுகிய காலத்திலேயே அவர் ஒரு முக்கிய தத்துவத்தை வெளியிட்டு, எந்த விதமான வசதி வாய்ப்பும் இல்லாத நிலையில் கால் நடையாகவே இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்து, பல அறிங்கர்களுடன் தன்னுடைய கொள்கை   உண்மையானது என்று வாதித்து, சமயம் என்பதை அன்பின் அடிப்படையிலான,  அறிவின் அடிப்படையிலான ,  நேருக்கு நேர் அனுபவித்து உணர அறை கூவல் விடுப்பதான அறிவியலாக ஆக்கி , இந்திய துணைக் கண்டத்திலே, புரட்சிகரமான   மாறுதலை உண்டு பண்ணி இருக்கிறார்.

  காடுகளில் நடை பெற்று வந்த ஆன்மீக ஆராய்ச்சியை நாட்டுக்கு கொண்டு வந்தார்.   இவ்வாறாக    இந்தியாவின் வரலாற்றில் ஆதிச‌ங்க‌ரர்  ஒரு முக்கிய இடம் படித்தவர் ஆகி விட்டார்.

காலப் போக்கிலே இந்த சங்கராச்சாரியார் என்கிற பட்டமானது ஒரு பதவியாக ஆக்கப் பட்டு விட்டது. எனவே சங்கராச்சாரியார் என்பவற்றின்  தத்துவ உண்மையும், அன்பும்,  கடின உழைப்பும் பின்னுக்கு தள்ளப் பட்டு சங்கராச்சாரியார் என்கிற பதவியில் இருப்பவரின் பாப்புலாரிட்டி,  செல்வாக்கு, புகழ், சொத்து ஆகியவற்றுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலை தோன்றி விட்டது.  

சங்கராச்சாரியார் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள  பல ஆன்மீக  வாதிகளையும் ,  இன்னும் சொல்லப் போனால் உலக அளவிலே உள்ள பல மத தலைவர்களையும்  அவர்களிடம் உள்ள செல்வாக்கு, அதிகாரம், சொத்து, தொண்டர்கள்  எண்ணிக்கை  ஆகியவற்றின் அடிப்படையிலே மக்கள்  மதிக்க செய்கிறார்கள். இவாறாக மின்னுவதை எல்லாம் பொன்னாக எண்ணும் போக்கே உள்ளது.

சங்கராச்சாரியார் ஆவது என்றால்  பில்லியன் கணக்கில் சொத்துக்கள், கல்லூரிகள், சக்தி வாய்ந்த அரசியல் செல்வாக்கு இவைகளைப் பெற்று, அதனால் பலரும் வந்து பார்க்கும்படியாகவும், கும்பிட்டு செல்லும்படியாகவும் ஒரு பீடாதிபதியாக  உள்ள நிலை தான் சங்கராச்சாரியார் ஆவது என்று  நினைக்கிறா ர்கள்!

அப்படி என்றால் இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் பதவிக்கும், பிற மாண்புமிகு, மான மிகு பதவிகளுக்கும் என்ன‌ பெரிய‌ வேறுபாடு?

இப்ப‌டிப்ப‌ட்ட‌ “சங்கராச்சாரியார் ப‌த‌வி” வேண்டுமென்றால், அர‌சாங்க‌மே ஆங்காங்கே (ஐ.ஐ.டி. களை உருவாக்குவ‌து போல‌) ம‌ட‌ங்க‌ளை உருவாக்கி, அருகிலே கோவில், அத‌ற்க்கு நில‌ங்களையும், க‌ல்லூரிக‌ளையும் அளித்து த‌லித் ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை “சங்கராச்சாரியார்” ஆக‌ நிய‌மித்து விட‌லாமே!

 புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

என‌வே  ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவ‌து,விவேகான‌ந்த‌ர், ஆதி ச‌ங்க‌ர‌ர், புத்த‌ர் போன்ற‌ நிலையை அடைவ‌து என்ப‌தே ச‌ரியான‌து. அது சிறிது க‌டின‌ம் என்றாலும் நிச்ச‌ய‌ம் முடியும். க‌டின‌ உழைப்பு, விடா முய‌ற்சி இவைதான் தேவை. அதை அப்ப‌டி ஆக‌ விரும்பும் ஒருவ‌ர்தான் அந்த‌ உழைப்பை அளிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையை அடைய‌ ப‌ண‌மோ, அர‌சிய‌ல் செல்வாக்ககோ உத‌வ‌ முடியாது.

ஆனால்   ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவ‌து, “சங்கராச்சாரியார் பதவியை அடைவது” ஆவ‌து என்றால் அது சிறிது எளிதான‌து. அத‌ற்க்கு தேவை ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு, ஆள் பல‌ம் இவைதான்.

ஒரு மனிதரின் கட்டுப்பாடு, விடா முயற்ச்சி, கடின உழைப்பு , ஆராய்ச்சி இவற்றின் மூலம் மட்டுமே  ஒருவர் தான்னை தானே சங்கராச்சாரியார் ஆக்கிக் கொள்ளவே முடியும். 

எல்லா உயிர்க‌ளாக‌வும் இருப்ப‌து ஒன்றே என்கிற‌  தத்துவ‌த்தை முக்கிய‌க் க‌ருத்தாக‌ அறிவித்த‌வ‌ர். அந்த‌ நிலையை நேர‌டியாக‌ உணரும் வாய்ப்பு ம‌னித‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வும் தெரிவித்த‌வ‌ர் ஆதி ச‌ங்க‌ர‌ர். என‌வே  த‌லித் ஒருவ‌ர் ச‌ங்க‌ராச்சாரியார் நிலையை அடைந்தால் ஆதி ச‌ங்க‌ர‌ரின் ஏக‌த்துவ‌ சித்தாந்த‌ம் இன்னும் உறுதி ப‌டுத்த‌ப் படும். உல‌கின் ப‌ல ப‌குதிக‌ளில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ளும்‍ -அவ‌ர்க‌ள் ஜப்பானிய‌ரோ, பிரெஞ்சு கார‌ரோ, ருஷிய‌ரோ, நீகிரோ இன‌த்த‌வ‌ரோ –  ச‌ங்க‌ராச்சாரியார் நிலையைஅடைந்தால் அது அந்த‌ த‌த்துவ‌த்தை இன்னும் உறுதி செய்த‌து ஆக்கும்.  முக்கிய‌மாக‌ பெண்களும் இந்த‌ நிலையை அடைவ‌து அந்த‌ த‌த்துவ‌த்தின் ஏக‌த்துவ‌க் கொள்கையை இன்னும் இன்னும் அதிக‌மாக‌ உறுதி செய்த‌து ஆகும். 

இந்தியாவின், இந்து ம‌த‌த்தின் உண்மை ஆன்மீக‌ த‌லைமை வெற்றிட‌மாக‌ உள்ள‌து. த‌லித் ச‌முத‌ய‌த்தின‌ர் அதைப் புரிந்து கொண்டால் அந்த‌ த‌ல‌மை இட‌த்தை அவ‌ர்க‌ள் நிர‌ப்ப‌லாம்.
த‌லித் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சங்கராச்சாரியார் ஆக ச‌ரியான‌ நேர‌ம் இதுவே!

ஆதி ச‌ங்க‌ர‌ரின் அன்பையும், அறிவையும், த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ உழைப்பையும், செய‌ல் திற‌னையும் பார‌ட்ட‌வும் த‌லை வ‌ண‌ங்கவும் இந்த‌ த‌ருண‌த்தில் நினைவு செய்கிறேன்!

Advertisements

30 Responses to "தலித் ஒருவர், சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் – 2"

ஆதி சங்கரர் நான் தான் சங்கரன் என்று தானே கூறிக்கொள்ள வில்லை. ஆதி சங்கரரின் ஞானத்தேடல் போல தானெ ஞானம் பெற்றால் ஞாலம் அவனை ஏற்றுக்கொள்ளும். யார் கேட்கப் போகிறார்கள். பிறகு குமுதம் ஆனந்த விகடனில் வாரத்தொடர் போடுவார்கள். கார்பரேட் சாமியாராகிடலாமே.

http://www.hayyram.blogspot.com

ஆதி சங்கரர் போல எல்லா உயிரையும் ஒன்றாகவே , தானாகவே எண்ணுபவர் எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். அவரை சங்கராச்சாரியார் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை. அழைத்துதான் ஆக வேண்டும்.

ஆன்மீகத்துக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சிலரை எல்லாம் சங்கராச்சாரியார், சங்கராச்சாரியார் என்று அழைக்கும் போது உண்மையான அத்வைதியை சங்கராச்சாரியார் என்று அழைத்தால் என்ன? கண்டவரையும் சங்கராச்சாரியார் என்று அழைத்து அந்தப் பெயருக்கு உள்ள மரியாதையையே கெடுத்து வைத்து இருக்கிறார்கள்.

அந்த நிலையில் எவர் ஒருவர் சங்கராச்சாரியார் என்று அழைக்கப் படத் தகுதியானவரோ, அவரை அப்பெயரிட்டு அழைத்தாவது சங்கராச்சாரியார் என்ற பெயரின் அர்த்தமாவது நிலைக்கும் படி செய்யலாமே.

கார்ப்பரேட் சாமியாராக வேண்டாம் என்றுதானே இவ்வளவும் எழுதுகிறோம்.

ஒரிஜினல் சங்கராச்சாரியாரான ஆதி சங்கரர் கடைசி வரை கையில் பணம், சொத்து வைத்து இல்லாமல் கால்நடையாகவே நடந்த துறவியாகத் தான் இருந்தார்.

கார்பரேட் சாமியார் முறையில் அதிகம் பிழைப்பது யார் என்பதையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆதி சங்கரர் தவ ஞானத்தையும் சமதர்மத்தையும் மட்டுமே போதித்திருந்தால் தாராளமாக அனைவரும் அந்த நிலையினை அடைந்திருக்கமுடியும்;அதற்கொரு பீடமே தேவைப்பட்டிருக்காது;

ஆனால் அவரோ மிகத் தந்திரமாக மனு ஸ்மிருதியையும் வர்ணாசிரமத்தையுமே பரப்பினார்;அதுவே இன்றைக்கு இந்தியா பல துண்டுகளாக சிதறியிருப்பதற்குக் காரணமாக அமைந்துவிட்டது;

மற்றபடி தலித்துகளும் சங்கராச்சாரியாக வேண்டும் என்று கூறுவதும் கூட தீண்டாமையின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைந்திருக்கும்;

ஏனெனில் மிக அருகிலிருக்கும் மேல்மருவத்தூர் பீடத்தையே சங்கரமடம் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லையே;இவ்விரண்டு பீடாதிபதிகளும் சந்தித்துக் கொண்டதாகவும்கூட‌ இதுவரை செய்தி வெளியானதில்லை;
மேலும் சைவ வைணவப் போர்களும் நாம் அறியாதவையல்ல..!

இந்தியத் தாய்த் திருநாட்டினை கூறுபோட்டு வைத்திருக்கும் இதுபோன்ற பீடங்கள் ஒழிக்கப்படுவதே மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்; மாத்திரமல்ல, மக்களும் கூட மிக விரைவாக இந்த பீடங்களிடம் சலிப்படைந்து வருகிறார்கள் என்பதே உண்மை..!

திரு. சில்சாம் அவ‌ர்க‌ளே,

//அதற்கொரு பீடமே தேவைப்பட்டிருக்காது;//

ஆதி ச‌ங்க‌ர‌ர் பீட‌ங்க‌ளை நிறுவிய‌து அவ‌ருடைய‌ த‌த்துவ‌ம் வ‌ருங்கால‌த்தில் தொட‌ர்ந்து இந்தியாவில் உள்ள‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தப் ப‌டுவ‌த‌ற்க்கே. பீட‌ங்க‌ளை நிறுவிய‌தில் எந்த‌ ஒரு த‌வறும் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. பீட‌ங்க‌ளை நிறுவிய‌து ந‌ல்லது என‌வே நான் க‌ருதுகிறேன். ஆனால் அந்த‌ பீட‌ங்க‌ளில் இருந்து தத்துவ‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொண்டு, வாழ‌க்கையில் செய‌ல் ப‌டுத்துவ‌தை விட்டு விட்டு அந்த‌ பீட‌ங்க‌ளை துதிப்ப‌தில் மக்கள் அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்தி விட்டார்க‌ள் என்ப‌தாக‌ கொள்ள‌லாம்.

//ஆனால் அவரோ மிகத் தந்திரமாக மனு ஸ்மிருதியையும் வர்ணாசிரமத்தையுமே பரப்பினார்;;//

இந்த‌ த‌வ‌றான‌ க‌ருத்தை யாரோ உங்க‌ளிட‌ம் த‌ந்திர‌மாக‌ புகுத்தி இருக்கிறார்க‌ள் என‌ எண்ணுகிறேன். நீங்க‌ள் கூறும் க‌ருத்து த‌வ‌று என்ப‌தை, ச‌ற்று சிந்திந்த்தால் நீங்க‌ளே புரிந்து கொள்வீர்க‌ள். ஏனெனில் ஆதி ச‌ங்க‌ர‌ரின் கால‌ம் ச‌மீப‌த்திய‌து, எட்டாம் நூற்றாண்டு. ஆனால் இந்தியாவில் ஆதி ச‌ங்க‌ர‌ர் பிற‌ப்ப‌த‌ற்க்கு, ப‌ல ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே வ‌ருணாசிர‌ம ச‌முதாய‌ம் இருந்திருக்கிற‌து. ம‌ணுவும் ஆதி ச‌ங்க‌ர‌ருக்கு பல்ல‌யிர‌ம் வ‌ருட‌ம் முந்திய‌ கால‌த்த‌வ‌ர். ஆதி ச‌ங்க‌ர‌ர் ம‌ணுவையோ, வ‌ர்ணாசிர‌ம‌ முறையையோ ஆத‌ரித்தால் அவ‌ர் எத‌ற்க்கு எல்லா ஜீவ‌ராசிக‌ளின் உயிராக‌வும் இருப்ப‌து ஒன்றே என்ற‌ க‌ருத்தை தெரிவிக்க‌ வேண்டும்? சில‌ குறிப்பிட்ட‌ ம‌னித‌ர்க‌ள் உயர்ந்த‌வ‌ர்க‌ள் என்று அவ‌ர் கூற‌வில்லையே. எல்லா உயிரும் ஒன்றே‍, வேறுபாடே இல்லை என்ப‌தை மிக‌ வ‌லியுறுத்திக் கூறி யிருக்கிறாரே!

//அதுவே இன்றைக்கு இந்தியா பல துண்டுகளாக சிதறியிருப்பதற்குக் காரணமாக அமைந்துவிட்டது//

இந்தியா துண்டுக‌ளாக‌ பிரிந்து இல்லை. எல்லா இந்திய‌ ம‌க்க‌ளின் வாழ‌க்கை முறையும், ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌மும் ஒன்றே. எல்லோரும், திரும‌ண‌ம் செய்த‌ல், குழ‌ந்த‌கைளை பெறுத‌ல், அவ‌ர்க‌ளி வ‌ள‌ர்த்து ஆளாக்குத‌ல், இப்ப‌டி எல்லோரும் ஒரே வ‌கையான‌ க‌லாச்சார‌த்தையே பின் ப‌ற்றுகின்ற‌ன‌ர். பெண்கள் பூப்பெய்துவ‌தை விழாவாக‌ கொண்டாடுவ‌து கூட‌ இருக்கிற‌து. என்னுடைய‌ கிறுத்துவ‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூட‌ அவ‌ர் பெண் பூப்பெய்து விழாவுக்கு என்னை அழைத்து இருந்தார். உல‌கிலேயே ப‌ல்வேறு மொழி பேசும் ம‌க்க‌ள் இண‌ந்து வாழும் ஒரே நாடாக‌ இந்தியா ம‌ட்டுமே உள்ள‌து.

//ஏனெனில் மிக அருகிலிருக்கும் மேல்மருவத்தூர் பீடத்தையே சங்கரமடம் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லையே;இவ்விரண்டு பீடாதிபதிகளும் சந்தித்துக் கொண்டதாகவும்கூட‌ இதுவரை செய்தி வெளியானதில்லை;//

ஏற்றுக் கொள்ள‌ வேண்டும் என்று நீங்க‌ள் கூற‌ வ‌ருவ‌த‌ன் பொருள் என்ன‌? இந்து ம‌த‌த்தில் யார் வேண்டுமான‌லும் அத‌ன் ஒரு குறிப்பிட்ட‌ க‌ருத்தை பிர‌ச்சார‌ம் செய்ய‌ ஒரு அமைப்பை உருவாக்க‌லாம்.
உதார‌ண‌மாக‌ சுவாமி விவேகான‌ந்த‌ரால் நிறுவ‌ப் ப‌ட்ட‌து இராம‌ கிரிஷ்ண‌ ம‌ட‌ம். அத‌ன் த‌லைவ‌ர்க‌ள் யாரையும் எந்த‌ ச‌ங்க‌ர‌ ம‌ட‌ பீடாதிப‌தியும் சந்திக்க‌வில்லையே?

எந்த‌ ஒரு “பீட‌மும்” இன்னொரு பீட‌த்தை அங்கீக‌ரிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லையே. ஒவ்வொரு பீட‌மும் த‌ங்க‌ளுக்கு எது முக்கிய‌மான‌ ஆண்மீக‌ப் ப‌ணி என்று க‌ருதுகின்ற‌தோ அதை செய்கின்ற‌ன‌. இதிலே யாரும் யாரையும் அங்கீக‌ரிக்க‌ வேண்டும், ச‌ந்திக்க‌ வேண்டும் என்கிற‌ அவ‌சிய‌ம் என்ன?

//மற்றபடி தலித்துகளும் சங்கராச்சாரியாக வேண்டும் என்று கூறுவதும் கூட தீண்டாமையின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைந்திருக்கும்;//

த‌லித் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர் ஒருவ‌ர் ச‌ங்கராச்சாரியார் நிலையை அடைந்தால் , எல்லா ச‌மூக‌த்தின‌ரும் அவ‌ரை ம‌ரியாதை செய்து வ‌ணங்கும் நிலை உருவாகும். அதனால் சாதி உண‌ர்வுக‌ள் நீங்கி சாதி வேறுபாடுக‌ள் இன்னும் இன்னும் குறைந்து ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் உருவாகும் நிலை ஏற்ப‌டும்.

//மக்களும் கூட மிக விரைவாக இந்த பீடங்களிடம் சலிப்படைந்து வருகிறார்கள் என்பதே உண்மை..!

ம‌க்க‌ளை இணைக்கும் வ‌கையிலான‌ உண்மையான‌ ஆண்மீக‌த்தை ப‌ர‌ப்பாத‌ பீட‌ங்க‌ள், பீட‌ங்க‌ளை த‌வ‌றாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தும் பீட‌ங்க‌ள் ம‌க்க‌ல‌ல் புற‌க்க‌ணிக்க‌ப் ப‌டும் என்ப‌து உண்மையே. //

Chillsam does not know the truth as usual. Kanchi Sankaracharya and Bangaru Adigalar have met many times. In Kalavai, the Sankara Matam had large tract of land. Bangaru Adigalar requested Sankaracharya to give that land to them to start educational institutions. Sankaracharya readily agreed and donated that land to Adigalar. Adigalar has built schools and college in that land.
Anjan

///எல்லா உயிர்க‌ளாக‌வும் இருப்ப‌து ஒன்றே என்கிற‌ தத்துவ‌த்தை முக்கிய‌க் க‌ருத்தாக‌ அறிவித்த‌வ‌ர். அந்த‌ நிலையை நேர‌டியாக‌ உணரும் வாய்ப்பு ம‌னித‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வும் தெரிவித்த‌வ‌ர் ஆதி ச‌ங்க‌ர‌ர். என‌வே த‌லித் ஒருவ‌ர் ச‌ங்க‌ராச்சாரியார் நிலையை அடைந்தால் ஆதி ச‌ங்க‌ர‌ரின் ஏக‌த்துவ‌ சித்தாந்த‌ம் இன்னும் உறுதி ப‌டுத்த‌ப் படும். உல‌கின் ப‌ல ப‌குதிக‌ளில் உள்ள‌ ம‌னித‌ர்க‌ளும்‍ -அவ‌ர்க‌ள் ஜப்பானிய‌ரோ, பிரெஞ்சு கார‌ரோ, ருஷிய‌ரோ, நீகிரோ இன‌த்த‌வ‌ரோ – ச‌ங்க‌ராச்சாரியார் நிலையைஅடைந்தால் அது அந்த‌ த‌த்துவ‌த்தை இன்னும் உறுதி செய்த‌து ஆக்கும். முக்கிய‌மாக‌ பெண்களும் இந்த‌ நிலையை அடைவ‌து அந்த‌ த‌த்துவ‌த்தின் ஏக‌த்துவ‌க் கொள்கையை இன்னும் இன்னும் அதிக‌மாக‌ உறுதி செய்த‌து ஆகும்.///

மிகச் சிறந்த கட்டுரை.அறிவியலும் இந்த ///எல்லா உயிர்க‌ளாக‌வும் இருப்ப‌து ஒன்றே என்கிற‌ தத்துவ‌த்தை/// நோக்கியே செல்கிறது.

அழகான, ஆழமான oru கட்டுரை. சொல்லவந்த கருத்தை நிதானமாக எடுத்துரைத்து உள்ளீர்கள்.. திருச்சிக்காரனுக்கு நிகர் திருச்சிக்காரன்தான்.

உங்கள் பதிவை மின்னஞ்சலில் தெரிவித்தமைக்கு நன்றிகள்..

திருச்சி ஐயா,

ஏற்கனவே இன்றைக்கு ‘தலித்’என்று அழைக்கப் படும் சமுதாயத்தில் இருந்து மாபெரும் வேதாந்த ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். நமது சமீப காலங்களில் எடுத்துக் கொண்டால்

ஸ்ரீ நாராயண குரு (பூர்வாசிரமத்தில் ஈழவர்)
சுவாமி சகஜானந்தர் (பூர்வாசிரமத்தில் அரிசனர்)
மாதா அம்ருதானந்தமயி (பூர்வாசிரமத்தில் மீனவர்)

இவர்கள் மானுட ஆன்மநேய விடுதலைக்காக அறைகூவியவர்கள்.. எந்த “பீடாதிபதி”யும் விட அதிகமாக நடைமுறையில் அத்வைதத்தை வாழ்ந்து காட்டியவர்கள். இந்தப் புனிதப் பாரம்பரியம் தொடரட்டும் என்று வாழ்த்துவோம் – இது இனிமேல் தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை..

சகோதரர்கள் தனபால், மறவன், ஜடாயு ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி.

ஜடாயு அவர்கள் அளித்த உதாரணங்கள் எல்லோரும் அறியும் வகையில் உதவியாக இருக்கும்.

நாம் கட்டுரையிலே குறிப்பிட்டது போல இந்தியா வரலாற்றிலே ஆன்மீக அறிங்கர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். எல்லோருக்குமே நாம் நன்றி உடையவர்களாகவே உள்ளோம்.

இதிலே ஆதி சங்கரர் என்பவர் குறிப்பாக கூறப் படக் காரணம் அந்த நிலை பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கட்டுரையிலே குறிப்பிட்டு உள்ளோம். அவர் படிப்பறிவு (knowledge of scriptures), பகுத்தறிவு (Logical analysis, reasoning and rational philosophy), பட்டறிவு (Realisation) இந்த மூன் றையும் இணைப்பவராக, செயல், பக்தி, ஞானம் இப்படி பல துறைகளின் பல்கலைக் கழகமாக இருந்திருக்கிறார். மிகவும் குறுகிய கால கட்டத்திலே எந்த ஒரு கட்டமைப்பு வசதியும் இல்லாமல் கிட்டத்தட்ட தனியாக ஒரு வியப்புக்குரிய செயலை செய்து இருக்கிறார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதைப் போல பிரகாசிக்கும் வாய்ப்பு இப்போது உள்ளது என்பதையே நாம் குறிப்பிடுகிறோம். இந்து மத ஆன்மீகத்திலே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கணிசமான பங்களிப்பை அளிக்கவும், தலைமை ஏற்று நடத்தவும் சரியான காலம் கனிந்து உள்ளது என்பதையே நான் குறிப்பிடுகிறேன். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொது நீரோட்டத்தில் முழுதும் இணையவும் வேறுபாடில்லாமல் ஒரே சமுதாயமாக , சமத்துவ சமுதாயமாக , அத்வைதமாக உருவாகவும் இது உதவும் என்பதே என் கருத்து.

உங்களுக்கு ஆதரவான கருத்துக்களுக்கு மட்டுமே நன்றி சொல்லுவீர்களா,நண்பரே..?

நன்றிகள் கருத்துக்காக இல்லாவிட்டாலும்………….?

சகோதரர் சில் சாம் அவர்களே,

சில சமயம் கருத்துக்கு பதில் அளிக்கும் கவனத்தில் இருந்து விடுகிறோம். நண்பர் ராமின் கருத்துக்கு கூட நன்றி தெரிவிக்கவில்லையே.

நான் உண்மையிலே அதிக நன்றி உடையவனாக இருக்க வேண்டியது உங்களுக்குத்தான்.

அடடா…எந்த வகையில் என்றும் கொஞ்சம்….ப்ளீஸ்..!

தொட‌ர்ந்து, த‌ள‌த்தைப் பார்வையிட்டு உங்க‌ள் க‌ருத்துக்களைப் ப‌திவு செய்து வ‌ருகிறீர்க‌ள்.

தொட‌ர்ந்து த‌ள‌த்தைப் பார்வையிட்டு உங்க‌ள் க‌ருத்துக்களைப் ப‌திவு செய்து வ‌ருகிறீர்க‌ள்…..
மற்ற‌ப‌டி என்னுடைய‌ க‌ருத்துக்க‌ள் விம‌ரிச‌ன‌ம் செய்ய‌ப் ப‌டுவ‌து த‌வ‌ற‌ல்ல‌. அதுவும் முக்கிய‌மான‌தே. அதே நேர‌ம் விம‌ரிச‌ன‌த்தில் முக்கிய‌க் க‌ருத்து இருந்தால் அதை நான் ஏற்றுக் கொள்கிரேன்.

அருமை நண்பரே, உங்களது சலியாத பதில்களை தமிழ்ஹிந்து தளத்தில் கண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

திரு. ஜெய‌க்குமார் அவ‌ர்க‌ளே, த‌ள‌த்தைப் பார்வை இட்டு உங்க‌ளின் க‌ருத்தை தெரிவித்த‌த‌ற்க்கு மிக்க ந‌ன்றி. தொட்ர்ந்து த‌ளத்தைப் பார்வை இட்டு உங்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்குமாறு கோருகிறென்.

தலித்துகள் மதிப்பு பெறக்கூடிய முன்னேற்றத்துக்கு, இது போன்ற யோசனைகள் முதற்படி, ஆனால் நடக்காது என்பதும் புரிகிறது, இந்து இயக்கங்கள் ஒரு போர்க்குணத்தோடு தலித்துகளுக்கு முழுமையான வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருதல் இன்றைய முக்கிய தேவை. இல்லையேல் மத மாற்றங்கள் தவிர்க்கமுடியாது, அதை தடுக்கும் தார்மீக உரிமையும் இந்து இயக்கங்களுக்கு, இந்து என்று சொல்லிக்கொள்ளும் எவருக்குமோ இல்லை.

சகோதரர் திரு. குடுகுடுப்பை அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டு உங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இது நடக்காது என்று நாம் எண்ண வேண்டியதில்லை.முடியாது நடக்காது என்பதே இல்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகளை நான் இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ஆன்மீக துறையில் உண்மையான ஆன்மீக தேடல் செய்பவர்கள் வேகமாக முன்னேற முடியும். அரசியலிலோ, சினிமா துறையிலோ தடம் பதிப்பது கடினமானது. யாராவது புதிய கட்சி ஆரம்பித்தால் அவர்களுக்கு பல இடையூறுகள் வரக் கூடும். ஒரு ஏரியாவிலே புதிய கட்சியின் கொடிக் கமபத்தை நடுவது, அதைப் பாதுகாப்பது எளிதல்ல. ஆனால் ஆன்மீகத்தின் ஆரம்ப தளம் நமது மனமே. நமது மனம் முழு வலிமை பெற்ற பின் அதை நாம் பிற மனங்களுக்கு விரிவு படுத்த முடியும்.

தலித் சமுதாய மக்கள் ஆன்மீகத்தில். இந்து மதத்தில் கணிசமான பங்களிப்பு அளிக்கப் போகிறார்கள், தலைமை ஏற்று நடத்துவார்கள் என்பது வெறுமனே எழுதப் பட்ட வார்த்தைகள் அல்ல, அவை உண்மையில் நடக்கப் போகும் நிகழ்வே, என்பதாகவே நான் கருதுகிறேன். இது பற்றி தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே- 2 கட்டுரையில் எழுதுவோம். தொடர்ந்து தளத்தைப் பார்வை இட்டு, உங்களின் கருத்துக்களை பதிக்குமாறு கோருகிறேன்.

சங்கராச்சாரியார் என்பவர் மதத் தலைவர். வர்ணாசிரமத்தில் பிராமணர் அல்லாதவர் வேதம் படிக்கலாகாது என்று சொல்லப்பட்டிருப்பதாக நான் படித்திருக்கிற விஷயங்கள் சொல்கின்றன. (நிஜமா என்று தெரியாது)வேதம் படிக்காதவர் மதத் தலைவர் ஆவது பைபிள் தெரியாதவர் பாதிரியார் ஆகிற மாதிரியானது. அதனால்தான் தலித்துகள் சங்கராச்சாரியார் ஆக முடியுமா என்கிற கேள்வியே வந்தது.

இன்றைய சூழலில் வர்ணாசிரமமே அர்த்தமற்றதாக ஆகி விட்டது.

வர்ணாசிரமத்தை ஆதரித்தவர்கள் எந்தக் காழ்ப்புணர்ச்சியிலும் அதைச் செய்யவில்லை என்பது என் துணிவு.

குல வித்தை கல்லாமற் பாகப்படும் என்றொரு பழமொழி உண்டு. தலைமுறை தலைமுறையாக நாம் எதைச் செய்கிறோமோ அதில் யாரிடமும் கற்காமலே நமக்கு உன்னதம் கிடைக்கும் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் வர்ணாசிரமம் வந்ததாகவே நான் நம்புகிறேன்.

இன்றைக்கு பல தொழில்கள் தனிமனிதத் திறனை நம்பாமல் இயந்திர மயமாகி விட்டன.

தச்சு எந்திரங்களையும், கழிவு நீர் எந்திரங்களையும் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி எல்லோரும் இயக்கும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

வர்ணாசிரமம் சொல்லப்பட்டபோது இருந்த சமூக நிலை வேறு, இன்றைய சமூக நிலை வேறு.

இன்றைக்குக் கேட்கப் பட வேண்டிய கேள்வி என்ன தெரியுமா?

சங்கராச்சாரியார் என்று ஒருத்தர் தேவையா? என்பதே.

இன்றைக்குக் கல்வியும், அறிதலும், புரிதலும் முன்னை விட உன்னத நிலையில் இருக்கிறது. மத சம்பிரதாயங்கள் சொன்னவை இன்று விஞ்ஞான வடிவில் வந்து மதத்தை நம்பாதவர்களும் கடைபிடிக்கிற நிலைக்கு வந்தாயிற்று. புரியாத காலத்தில் கடைப் பிடிக்க வைக்க கீழ் படிதல் தேவையிருந்தது. அப்போது ஒரு தலைவர் தேவைப்பட்டார்.

இன்றைக்கு அவசியமில்லை என்று என் சிற்றறிவு சொல்கிறது.

மாறுபட்ட கருத்துக்களை வரவேற்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

த‌ள‌த்திற்க்கு வ‌ந்து க‌ட்டுரையைப் பார்வை இட்டு க‌ருத்து ப‌திவு செய்த‌ ச‌கோத‌ர‌ர் ஜ‌வாஹ‌ருக்கு ந‌ன்றி.

சில‌ முக்கிய‌ விட‌ய‌ங்க‌ளை எழுப்பி உள்ளீர்க‌ள். முத‌லில் பிராம‌ண‌ர்க‌ள் மட்டும் தான் வேத‌ம் ப‌டிக்க‌ முடியுமா என்று ஒரு ச‌ந்தேக‌த்தை வைத்து இருக்கிறீர்க‌ள்.

இதை சுவாமி விவேகான‌ந்த‌ரே தெளிவு ப‌டுத்தி இருக்கிரார்.

“பிராமண‌ர்க‌ள் ம‌ட்டும் தான் வேத‌ம் ப‌டிக்க‌லாம், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வேத‌ம் ப‌டிக்க‌க் கூடாது என்ப‌தாக‌ வேத‌த்திலே எங்காவ‌து சொல்லி இருக்கிற‌தா, இத‌ற்க்கான‌ ஆதார‌த்தை வேத‌த்திலே எங்காவ‌து காட்ட‌ முடியுமா” என்று ஆணித்த‌ர‌மாக‌ முழ‌ங்கி இருக்கிறார்.

மேலும் “ச‌த்திய‌ யுக‌த்திலே எல்லொரும் பிராம‌ண‌ர்க‌ளாக‌ இருந்த‌தாக‌வும், பிற‌கு வேலையின் அத்யாவ‌சிய‌ம் கார‌ண‌மாக த‌னிப் பிரிவுக‌ளாக‌ பிரிந்த‌தாக‌வும், ம‌றுப‌டியும் எல்லோரும் பிராம‌ண‌ர் ஆவார்க‌ள்” என்றும் சுவாமி விவேகான‌ந்த‌ர் சொல்லி இருக்கிறார். பிரிந்த‌ போது ப‌ணிச் சுமை கார‌ண‌மாக‌ வேத‌ அத்யாய‌ன‌த்தை பிற‌ பிரிவின‌ர் நிறுத்தி இருக்க‌ கூடும். நான் முன்பு தின‌மும் காலையும் மாலையும் ம‌ன‌க் குவிப்பு ப‌யிற்ச்சி செய்து வ‌ந்தேன். இப்போது ப‌ணி நேர‌த்தின் கார‌ண‌மாக‌ விடுமுறை நாட்க‌ளில் ம‌ட்டுமே ம‌ன‌க் குவிப்பு செய்கிறேன். உங்க‌ளின் க‌ருத்துக்க‌ள் மீதான் என் விரிவான‌ விளக்கத்தை ‍ தலித் ஒருவர் சங்கராச்சாரியார் ஆக சரியான நேரம் இதுவே- 2 ல் எழுதுவோம். அதையும் பார்வை இட்டு உங்க‌ள் க‌ருத்துக்க‌ளைப் ப‌தியுங்க‌ள்.

பிராமணர்கள் மட்டும் தான் வேதம் படிக்கலாம் என்பது உண்மை!!!

அதே நேரத்தில், எந்த வருணாசிரம பிரிவுகளில் இருந்து, யார் வேண்டுமானாலும், பிராமணன் ஆகலாம் என்பதும் உண்மை. பிராமணன் க்ஷத்ரியர் ஆக முடியும், க்ஷத்ரியர் சூத்திரர் ஆக முடியும், etc., etc.,

வருணாசிரம பிரிவு என்பது தொழிலால் பிரிக்கப்படுவது. இந்த காலத்து பாஷையில் விளக்க வேண்டுமென்றால், இப்போது இருக்கிற software engineer மாதிரி. Mechanical engg., civil engg., படித்த யார் வேண்டுமானாலும் software engineer ஆகலாம். ஆனால் software engineer ஆக உள்ள ஒருவன் தான் programming எழுத / செய்ய முடியும் என்பது போலவே தான்.

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரகுடுக்கைத் தனமாக பிராமணர்களை உசத்தி கூறியிருக்கிறது. அவர்கள் தான் தலையிலிருந்து பிறக்கிறார்கள். சூத்திரர்கள் காலிருந்து பிறக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது பற்றி சண்டையிடுகிறோம். in fact, பெருமாளை எடுத்துக் கொண்டால் அவர் உடம்பிலே விசேஷமானது பாதம் தான். அதை தான் சடாரியாக எல்லா மக்கள் தலையிலும் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் சூத்திரர்கள் தான் உயர்ந்தவர்கள். “பொற்பாதமே சரணம்”, “பொன்னடிகளே போற்றி” என்றுதான் சொல்லுகிறார்கள். யாரும் பெருமாள் தலையயோ, மார்பையோ, தொடையையோ கொண்டாடவில்லை. (பிரம்மா பற்றி இங்கே தேவையில்லை.) பாதத்திலிருந்து வந்ததால் இழிவு என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். தலை கல்வியையும், மார்பு வீரத்தையும், தொடை வியாபாரத்தையும், பாதம் சேவையயும் தான் குறிக்கிறது.

புராணங்கள் எல்லாம் dramatize பண்ணி எழுதப்பட்டவை. வைரமுத்து சொன்ன மாதிரி “கவிதைக்குப் பொய்யழகு”. அந்த மாதிரி தான்.

உங்கள் கருத்து நல்ல கருத்து. சமூகத்திற்கு இந்த விஷயத்தை எப்படி புரியவைப்பது என்பது தான் மிகப்பெரிய கேள்வி!!!

திருச்சிக்காரன், வாழ்த்துகள்!!!!

திரு. தி.சு.பா. அவர்களே,

தளத்திற்கு வந்து கருத்து பதிவு இட்டதற்கு நன்றி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

பிராமணர்கள் மட்டுமே வேதம் படிக்கலாம் என்பது உண்மை என்றால், எந்த அடிப்படையில் உண்மை?

பிராமணர்கள் மட்டுமே வேதம் படிக்கலாம் என்று சொல்வது பொய், அது தவறான கருத்து என நான் சொல்கிறேன். உங்களை புண் படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆனால் நான் இதை தெளிவாக சொல்ல வேண்டியுள்ளது.

கட உபநிஷத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கட உப நிடதம் முழுவதும் நசிகேதசுக்கும், யமதர்மருக்கும் இடையில் நடை பெற்ற உரையாடல் தான். இதில் நசி கேதாஸ் ஒரு அரசகுமாரன் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு ஒரு அரச குமாரனின் கேள்விகளுக்கு யமன் அளித்த பதிலை பிராமணர் மட்டுமே படிக்கலாம் என்பது எப்படி உண்மையாகும்?

இரண்டாவது இந்த நெற்றியில் தோன்றினான், காலில் தோன்றினார் என்பது எல்லாம் அவரவர் தங்கள் சாதியை உயர்வு படுத்திக் கொள்ள சொன்னதே. இந்தியாவில் ஒவ்வொரு சாதியினரும் தங்களைப் பற்றிய உயர்வு சொல்வார்கள். யாதவரை எடுத்துக் கொண்டால் கிருஷ்ணரே எங்கள் என்பார்கள். அரவானிகளை எடுத்துக் கொண்டால் நல்லரவான் எங்கள் கணவர் முறை என்பார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பிராமணர்கள் வீட்டில் ஒரு குழந்தை இறந்தால் அவர்களால் அந்தக் குழந்தை உயிர்ப்பிக்க முடியுமா? ஒரு பிராமணரின் கை வெட்டுப் பட்டு இரண்டு துண்டானால் சேர்த்து வைத்தால் அப்படியே ஒட்டிக் கொள்கிறதா?

உங்களை மன வருத்தம் அடையச் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. தயவு செய்து உங்கள் அறிவை , நன்னெறியை இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் அளித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கோருகிறேன்.

என் கருத்துக்களைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்து தளத்தைப் பார்வை இட்டு கருத்தைப் பதிவு செய்யக் கோருகிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் என் மனம் புண்படும் மாதிரி எதுவும் சொல்லவில்லை. “எல்லா மக்களுக்கும் சமத்துவம் இந்தியாவில் வேண்டும்” என்ற உங்கள் நல்லெண்ணத்தை மெச்சுகிறேன். எனக்கும் அது தான் ஆசை.

//யமன் அளித்த பதிலை பிராமணர் மட்டுமே படிக்கலாம்//

மேலே சொன்ன விஷயத்தில் எந்தவித தவறும் இல்லை. அதே போல், நான் முன்னே சொன்ன விஷயத்தை மறக்க வேண்டாம் – யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்திற்கும் மாறலாம்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.சிவில் இன்ஜினியரிங் படித்த ஒருவர் தான் வீடு கட்ட வேண்டும் என்பது நியதி. நீங்கள் ஸாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படித்திருந்தால் வீடு கட்ட முடியாது, கூடாது. உங்களுக்கு சிவில் இன்ஜினியரிங் terminologies புரியுமா? புரியாது. புரியாமல் வீடு கட்டினால் வீடு இடிந்து விட்டும். வேண்டுமென்றால், சிவில் பட்டம் வாங்கிய பின் வீடு கட்டலாம். ஸாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படித்த நீங்கள் சிவில் படிக்கு எந்தவித தடையும் இல்லையே! அதே போல், இதய மருத்துவம் படித்த ஒருவர் தான் இதய கோளாறு சரிபார்க்க முடியும், பார்க்கணும். நீங்கள் பல் மருத்துவம் படித்து விட்டு இதய சிகிச்சை செய்யக் கூடாது.

பயிற்சி பெற்ற ஒருவன் தான் கிரிக்கெட்டில் விளையாடலாம். இந்த மாதிரி சொல்லி கொண்டே போகலாம். (பயிற்சி இல்லாத அரசியல்வாதிகளை இங்கே உதாரணம் காட்ட வேண்டாம். 🙂 ).

இந்த மாதிரி விஷயங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது.

வாகனம் ஓட்டும் பொழுது செல்ஃபோன் உபயோகபடுத்துக் கூடாது என்பது சட்டம். இல்லை, ஒருவன் எனக்கு திறமை இருக்கிறது, அதனால் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவேன் என்றால் எப்படி? அப்படி சொல்பவர்களுக்கு அபராதம் சட்டத்தில். நரகம் வேதத்தில். மனிதனை முறைபடுத்த சட்டம் தேவை. வாழ்க்கையை நெறிபடுத்த வேதம் தேவை.

பிராமணன் என்பதை ஜாதியாக பார்க்காமல் ஒரு தொழிலாளியாக பார்க்க வேண்டும். நன்றாக வில் வித்தை பயிற்சி பெற்ற ஒருவன் தான் க்ஷத்ரியன் ஆக வேண்டும். பிராமணன் க்ஷத்ரியன் ஆக வேண்டுமென்றால் அவன் வில் வித்தை கற்க வேண்டும். அதே போல் எல்லா வர்ணத்திற்கும் பொருந்தும்.

இதில் தவறு இல்லையே? யோசியுங்கள்.

//பிராமணர்கள் வீட்டில் ஒரு குழந்தை இறந்தால் அவர்களால் அந்தக் குழந்தை உயிர்ப்பிக்க முடியுமா?///
நீங்கள் எதற்காக இதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

திரு. தி.சு. ப. அவர்களே,

இப்போது பிராமணர்கள் என்றே யாரும் இல்லை.

எனவே எல்லோரும் வேதம் படிக்கலாம் என்பதை உறுதி ஆக்கி விட்டால் விரும்பிபவர்கள் படித்துக் கொள்ளலாம்.

////பிராமணர்கள் வீட்டில் ஒரு குழந்தை இறந்தால் அவர்களால் அந்தக் குழந்தை உயிர்ப்பிக்க முடியுமா?///
நீங்கள் எதற்காக இதை சொல்கிறீர்கள் என்று புரியவில்ல////

நான் இதை சொன்னது, நெற்றியில் பிறந்தவர்கள் என்று கற்பனையாக உயர்வு பேசினாலும் உண்மை நிலையில் எல்லோரும் இயற்கையின் கையில் அடிமையாக ஒரு துன்பம் வரும் போது நம்மைக் காத்துக் கொள்ள முடியாமல் அழும் நிலையிலேயே இருக்கிறோம்.

திருச்சிகாரரே!
நன்றி. வேதத்தில் சொன்ன பிராமணன் இப்போது இல்லை, நிஜம் தான். ஆனால் நீங்கள் சொன்ன உபநிடதம் உதாரணத்திற்கு விளக்கம் கொடுத்தேன். அதை தப்பாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்கு.

வேதத்தில் நெற்றியிலிருந்து பிறந்தால் ஒசத்தி என்று சொல்லவில்லை. அதெல்லாம் மக்களின் அறியாமயால் வந்தது. in fact, பெருமாளைப் பொறுத்தவரை பாதம் தான் ஒசத்தி. இதை யாரும் சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லல்படுகிறார்கள்.

கீழே கீதைக்கு பாரதி கூறும் விளக்கத்தைப் படியுங்கள்.

(5ம் அத்தியாயம், 18வாது ஸ்லோகம்)
கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமின்றி எல்ல உயிர்களுக்குள்ளும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று கூறுகிறான்.

திருச்சிகாரரே!
நன்றி. வேதத்தில் சொன்ன பிராமணன் இப்போது இல்லை, நிஜம் தான். ஆனால் நான் நீங்கள் சொன்ன உபநிடதம் உதாரணத்திற்கு விளக்கம் கொடுத்தேன். அதை தப்பாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்கு.

வேதத்தில் நெற்றியிலிருந்து பிறந்தால் ஒசத்தி என்றெல்லாம் சொல்லவில்லை. அதெல்லாம் மக்களின் அறியாமயால் வந்தது. in fact, பெருமாளைப் பொறுத்தவரை பாதம் தான் ஒசத்தி. இதை யாரும் சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லல்படுகிறார்கள்.

கீழே கீதைக்கு பாரதி கூறும் விளக்கத்தைப் படியுங்கள்.

(5ம் அத்தியாயம், 18வாது ஸ்லோகம்)
கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமின்றி எல்ல உயிர்களுக்குள்ளும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று கூறுகிறான்.

எல்லாம் கடவுள் மயமன்றோ. பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், ……… நாராயணன், …………. நாராயணன்……

திருச்சிக்காரருக்கு, வணக்கம். ஊர்பாசம்தான் உங்கள் வலைத்தளத்திற்கு என்னை இழுத்து வந்தது. மேட்டருக்கு வருவோம். நம்ம மாவட்டத்திலே தீண்டாமை குறித்த ஓர் ஆய்வுக்காக் நாங்கள் தா, பேட்டைப் பகுதிகளில் சுற்றி வந்த போது கிடைத்த தகவல்கள்
** அவர்கள் வசிக்கும் பகுதிக்கு திருவிழா காலங்களில் சாமியும் தேரும் வரவேண்டும்.
** அவர்களுக்கு தலை முடி வெட்டிவிட அந்த ஊர் மருத்துவர் சம்மதம் தெரிவிக்கணும் (ஓசிக்கு இல்லை, காசுக்குத்தான்.. முடிவெட்டிக்கொள்ளவேண்டுமென்றால் அவர்கள் டவுன்பஸ் பிடித்து அருகிலுள்ள பெரிய ஊருக்குத்தான் போக வேண்டும்)
** டீ கடைகளில் அவர்களுக்கும் கண்ணாடி டம்ளர்களில் டீ தர வேண்டும்.
** சேரிகளில் ரேஷன் கடைகளும் போஸ்டாபீசும் வேண்டும்.
** சேரிகளில் டவுண்பஸ் நின்று பள்ளி செல்லும் தலித் குழந்தைகளை ஏற்றிச் செல்லவேண்டும்.
** குடிநீர் சமமாக வழங்கப்பட வேண்டும்.
** குப்பைகள் அள்ளுதலும் சாக்கடை சுத்தம் செய்யப்படுதலும் அவர்கள் பகுதியிலும் தடையின்றி நடைபெறுதல் வேண்டும்.
(தலித்துகள் கிராமங்களில் தொடக்கப்பள்ளி அதிகபட்சம் உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பெறுகிறார்கள். விரல் விட்டு எண்ணப்படுபவர்களே மேல்நிலைக்கல்வியும் பட்டப் படிப்பும் படிக்கிறார்கள்)
இதிலே எங்கே ஆன்மீகம்? சங்கராச்சாரியார் பட்டம்? கொஞ்சம் வலுவா இயக்கம் நடத்தி கோவில் சென்றால் சாதி இந்துக்கள் ஒன்று கோவிலைப் பூட்டி வைத்து விடுகிறார்கள், அல்லது அவர்கள் வேற கோவிலை அவர்களுக்காக கட்டிக் கொள்கிறார்கள். இதிலே த்வைதக் கருத்துக்கள் எப்படிக் கவ்வி பிடிக்கும்? இதுதான் இன்றைய உண்மை நிலைமை.
வானிலிருக்கும் ஆகாயம் வேண்டாம்.
காலின் கீழே உள்ள தரை நழுவாதிருந்தால் அதுவே போதும் என்ற கனிமொழி கவிதை தான் நினைவுக்கு வருகிறது.
ஆனந்த விகடனில் கார்பரேட் சாமியார்கள் பற்றி திருமாவேலன் கட்டுரையைப் படிங்க சார். இவங்களுக்கு எதுக்குசார் கல்வி நிறுவனம்,ஆடம்பர பங்களாக்கள், ஆள், அம்பு, எடுபிடி? ஏது சார் இவ்வளவு காசு? எந்த சாமியரும் நாட்டுக்குத் தேவையேயில்லை. நாகநாதன்.கே., திருச்சி

அன்புக்குறிய‌ ச‌கோத‌ர‌ர் கே. நாக‌நாத‌ன் அவ‌ர்க‌ளே,

ரொம்ப‌ ந‌ன்றிங்க‌.

ஊர்ப் பாச‌ம் விடாது, என‌க்கும் தான்.

வெளிப்ப‌டையாக் க‌ருத்து தெரிவித்து இருக்கீங்க‌. இதுதான் ந‌ம‌க்கு தேவை.

சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌து தான் ந‌ம் நோக்க‌ம். ஆனால் அதை ஒரே நாளிலோ, ஒரெ வ‌ருட‌த்திலோ உருவாக்கி விட‌ முடியாது என்ப‌து உங்க‌ளுக்குப் புரியும். ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ஆக‌லாம். ஆனாலும் நாம் நேர்மையாக‌ உழைப்பொம். அத‌ற்க்கான‌ எல்லா வ‌ழிக‌ளையும் ஆராய்கிரோம்.

உங்க‌ளுடைய‌ கேள்விக‌ள் மிக‌ அருமையான‌வை, உங்க‌ளின் கேள்விக‌ளுக்கு ந‌ம‌க்கு தெரிந்த‌ அள‌வில் தீர்வுக‌ளை விரைவில் புதிய‌ க‌ட்டுரையாக‌ வெளியிடுவோம்.

அதே நேர‌த்தில் இந்த‌ இர‌ண்டு க‌ட்டுரைக‌ளையும் ப‌டித்து உங‌க‌ள் கருத்துக்க‌ளை தெரிவிக்குமாறு கோருகிரோம்.

சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம்- 1

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

//ஆனந்த விகடனில் கார்பரேட் சாமியார்கள் பற்றி திருமாவேலன் கட்டுரையைப் படிங்க சார். இவங்களுக்கு எதுக்குசார் கல்வி நிறுவனம்,ஆடம்பர பங்களாக்கள், ஆள், அம்பு, எடுபிடி? ஏது சார் இவ்வளவு காசு? எந்த சாமியரும் நாட்டுக்குத் தேவையேயில்லை.//

இது ப‌ற்றி ந‌ம‌து க‌ட்டுரை

https://thiruchchikkaaran.wordpress.com/2010/03/08/pit-falls-facing-hinduism/

மீண்டும் ஒரு முறை ந‌ன்றி தெரிவித்து, ம‌ர‌க்கிளைக‌ள் ஆற்று நீரைத் த‌ழுவ‌ காவிரி ஆறு செல்லும் காட்சியை ம‌ன‌தில் நிறுத்தி விடை பெறுகிறேன்!

அன்புள்ள திருச்சிக்காரர் அவர்களுக்கு, வணக்கம். தங்களுக்கு என்று ஒரு வலைப்பூ இருப்பது இப்பொழுதுதான் அறிகின்றேன். தலித் சங்கராச்சாரியர் ஆகவேண்டுமா? சங்கராச்சாரியர் ஸ்தாபித்ததாகக் கூறப்படும் ஸ்ரீமடங்களுக்குத் தலைவரக வேண்டுமா? பின்னதற்குத்தான் ஒட்டியும் வெட்டியும் பேசுவதற்கு மக்கள் வருவர். ஏனெனில் சங்கரருடைய சித்தாந்தத்தை ஓதி உணர்ந்து அத்துவிதப் பணி செய்யும் பிராமனர் அல்லாத பல துறவிகலை நானறிவேன். சங்கரர்மடங்கள் வேதக்கல்வியைப் பிராமணர்களுக்குப் போதிக்க நிறுவப்பட்டவை. அங்கு தலித்துகளுக்கு இடமில்லை. ஆனால் வேதாந்தக் கல்வியை போதிக்கும் திருமடங்கள் உள்ளன. உண்மையிலேயே வேதாந்தக்கல்வியில் ஆர்வம் உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். நான் சங்கரருடைய தத்துவக் கொள்கையிலிருந்து பாறுபட்ட கருத்துடையவன். ஆனால் அவருடைய பக்தி நூல்களிலும் சந்நியாச தர்மத்திலும் பெருமதிப்பு உடையவ்ன். சங்கரர் விதிக்கும் சந்நியாச தருமத்திற்கு தலித்துக்குப் பழக்கமான வாழ்க்கை முறையும் சூழலும் பெருந்தடையாக இருக்கும். தலித் அவற்றைக் கடந்து வர மனவ்லியும் வைராக்கியமும் பெரிய அலவில் வேண்டும். ஒரு நாராயண குருவைப் போலவோ அல்லது ஐயன்காளியைப்போலவோ ஒருவரை அந்தச் சமூகம் பெறவேண்டும். சங்கராச்சாரியர் வேண்டாம்; ஆதிசங்கரர் வேண்டும். உங்களுடைய சிந்தனை வலிமை பெற வேண்டும்.

மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய முனைவர் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

என்னுடைய தளத்தைப் பார்வை இட்டு உங்களுடைய மேலான கருத்துக்களைப் பதிவு செய்ததை உண்மையில் இந்த தளத்திற்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்.

//தலித் சங்கராச்சாரியர் ஆகவேண்டுமா? சங்கராச்சாரியர் ஸ்தாபித்ததாகக் கூறப்படும் ஸ்ரீமடங்களுக்குத் தலைவரக வேண்டுமா? பின்னதற்குத்தான் ஒட்டியும் வெட்டியும் பேசுவதற்கு மக்கள் வருவர். //

மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள் ஐயா.

//சங்கரர்மடங்கள் வேதக்கல்வியைப் பிராமணர்களுக்குப் போதிக்க நிறுவப்பட்டவை. அங்கு தலித்துகளுக்கு இடமில்லை. //

ஐயா உங்களுக்கே நன்கு தெரியும், அது என்னவென்றால் பத்து நூற்றாண்டுகளுக்கு மேலாக வேர் பிடித்த முழுத்துறவு மதங்களான பவுத்தத்தையும், சமணத்தையும் அவர் தன் குறுகிய வாழ்நாளிலே நேர்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வழி முறையானது – பக்தியைப் பரப்பும் நேரத்திலே , பக்தி வழியை இல்லறத்தவர்க்கு மீண்டும் அளிக்கும் அதே நேரம், அறிவை முழு வீச்சில் பயன்படுத்தி, வாதப் போர்க்களங்களில் பல அறிங்கர்களை வெல்ல வேண்டிய சூழ்நிலை இருந்திரக்கிறது. அதற்க்கு அக்காலத்தில் கல்வி கேள்வி வாதங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த பிராமண பிரிவில் இருந்த கணிசமான பேரை தன்னுடைய இயக்கத்திற்கு அவர் உபயோகப் படுத்திக் கொண்டார். அவருக்கு வேறு வழி இருந்ததா என்று தெரியவில்லை. பதினாறே வருட ஆன்மீக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய செயலை செய்ய வேண்டி இருந்தது. (அப்பர் போன்றவர்கள் தமிழ் நாட்டில் செய்த பணி இணையற்றது. ஆனால் வட இந்தியப் பகுதியில் சங்கரரின் பணி கணிசமானது). அதை அப்படியே ஒரு சடங்காக வைத்து பிராமணர்கள் அணை கட்டியது போல செய்து விட்டார்கள், தவறு அவருடைய சீடர்களின் மீது என்பதாகவே தான் கருதுவதாக விவேகானந்தர் சொல்லி இருப்பதை நினைவு கூர்கிறேன்.

//ஏனெனில் சங்கரருடைய சித்தாந்தத்தை ஓதி உணர்ந்து அத்துவிதப் பணி செய்யும் பிராமனர் அல்லாத பல துறவிகலை நானறிவேன். ஆனால் வேதாந்தக் கல்வியை போதிக்கும் திருமடங்கள் உள்ளன. உண்மையிலேயே வேதாந்தக்கல்வியில் ஆர்வம் உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். //

இதுவும் சிறப்பானதே. அத்வைதத்தை தன்னுடைய மனதிலே உணர்ந்தவர்கள், எல்லா உயிரையும் ஒன்றாகவே பார்க்கும் நிலையை அநுபவத்தில் அடைந்தவர்கள் அவர்கள் சங்கரராகவே கருதப் பட்டே ஆக வேண்டும். சங்கரரே, மந்திரங்களை ஓதுவதால் பலன் இல்லை, ‘ நஹி, நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே” என்று தெளிவாக சொல்லியது உண்டே. அத்வைத நிலையை அடைந்தவன் ஜாதி, மத, இன, மொழி, வட்ட, ஜீவ பேதங்களை கடந்து விடுகிறான். இரண்டாவாதாக எதுவுமே பார்வையிலேயே அவர்களுக்கு இல்லையே. அவர்கள் பார்ப்பதே ஒன்றைத் தானே! ஒன்றை மட்டும் தானே!

//நான் சங்கரருடைய தத்துவக் கொள்கையிலிருந்து பாறுபட்ட கருத்துடையவன். //

ஆதி சங்கரரின் தத்துவத்திலிருந்து உங்களது தத்துவம் எந்த அளவில் மாறுபட்டு இருக்கிறது என்பதை , உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் , அது உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்குமானால் தயவு செய்து எழுதுங்கள் எனக் கோருகிறேன். அதை ஒரு தனிக் கட்டுரையாகவே நமது தளத்தில் வெளியிடலாம்.

//சங்கரர் விதிக்கும் சந்நியாச தருமத்திற்கு தலித்துக்குப் பழக்கமான வாழ்க்கை முறையும் சூழலும் பெருந்தடையாக இருக்கும். தலித் அவற்றைக் கடந்து வர மனவ்லியும் வைராக்கியமும் பெரிய அலவில் வேண்டும். //

200 ஆண்டுகளுக்கு முன்பு தலித் பிரிவு மக்கள் இப்படி இந்திய நாட்டின் பல் வேறு பொறுப்புகளில் தலைமை ஏற்கும் வண்ணம் முன்னேறுவார்கள் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். இப்போது பல்வேறு பணியிடங்களிலும் உண்மையில் யாருக்கும் எந்த வித்யாசமும் இல்லை. பள்ளி , கல்லூரி விடுதிகளில் எல்லோரும் மன அளவில் , ஒப்பீட்டளவில் ஒன்றாகவே உள்ளனர். மேலும் ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நெருப்பு போலப் பற்றக் கூடியது என நான் கருதுகிறேன். ஒரு இல்லறத்தவனுக்கு புலனடக்கம் எவ்வளவு கடினமோ, அதைப் போல உண்மையான துறவியை புலனுகர்ச்சி பாதைக்கு திருப்புவது அதை விட கே கடினம் என்பதே என் தாழ்மையான கருத்து. எனவே ஆன்மீகம் என்பது ஒரு மனிதனின் மன நிலையை உயர்த்துவதானால், அதில் யாரையும் உயர்த்த முடியும் என்பதாக நினைக்கிறேன். கண்ணப்ப நாயனாரின் பக்தி பற்றி தாங்கள் அறியாதது அல்ல. மேலும் சர். சி.வி. இராமனின் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்த ஒருவர் பெங்களூரில் உள்ள இராமன் ஆய்வுக் கழகத்தில்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை, யாரும் ஆராய்ச்சி செய்யலாம்.

கடைசியில் முத்தாய்ப்பாக ஆதி சங்கரர் வேண்டும் என்று முடித்து பொயடிக் ஜஸ்டிஸ் வழங்கி உள்ளீர்கள்.

உங்களின் வாழ்த்துக்கு பல முறை நன்றிகள்.

உங்களைப் போன்ற அறிவிலும், வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அறிஞர் பெருமக்களிடம் இருந்து நாங்கள் அறிய வேண்டியது அதிகம் உள்ளது. உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது எங்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் என்று கோரி, மீண்டும் நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: