Thiruchchikkaaran's Blog

கடவுள் பற்றி இந்துக்களின் புரிதல் சரியா?

Posted on: June 19, 2011


இந்துக்களை பொறுத்தவரையில் அவர்களின் கடவுள் கொள்கை எளிமையானது. கருமாரி அம்மனையோ, ஐய்யப்பனையோ, முருகனையோ, இராமரையோ….. அவர்கள் குடும்பத்தில் முக்கியமாக வழிபடும் கடவுளை கும்பிடுகின்றனர். “நாம கும்பிடர சாமி நம்மைக் காப்பாத்தும்” என்று நம்பும் அவர்களின் கோட்பாடு எளிமையானது.

 இதிலே ஒரு முக்கிய  விடயம்  என்னவென்றால், இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை. இது விடயமாக சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ  வைப்பேன் என்று இந்துக் கடவுளாவது  சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.

எனவே முருகனை வணங்குபவர் வாய்ப்பு கிடைக்கும் போது வெங்கடாசலபதியையோ, லக்ஷ்மியையோ…. வணங்கவும் செய்கின்றனர்.

இன்னும் சொல்லப் போனால் இந்துக்கள் மேரி மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கின்றனர். மசூதிக்கு சென்று சுகம் இல்லாத  பிள்ளைகளுக்கு மந்திரிக்கினறனர்.

இந்து மத்திலே எளிமையான மக்களின் இந்த  அமைதியான கடவுள் கோட்பாடு இவ்வாறு இருக்க, இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் இன்னும் பல ஆழமான சிந்தனைகளை முன் வைக்கினனர். மனிதனின் உயிர் (soul), கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும்,  அடைய முடியும் என்பதை இந்து மதத்தின் முக்கிய கோட்பாடாக பல பண்டிதர்கள் சொல்லுகின்றனர். இதிலே சில சிந்தனையாளர்கள் ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும் அதே கடவுள் பல  அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் சொல்லுகின்றனர்.

இந்தக் கோட்பாட்டை ஆராயும் போது இதிலே சில சந்தேகங்கள் வருவதாகவும், சில முரண்பாடுகள் தோன்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது பற்றி அன்புக்குரிய நண்பர் திரு. ரசீன் அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டு தன்னுடைய வினாக்களை எழுப்பியுள்ளார்.

கடவுள்!…. ஹிந்துக்களின் புரிதல்….

http://sunmarkam.blogspot.com/2011/05/blog-post.html

மனிதன் ஒருவனாக இருந்தாலும்,மகன் வேறு,கணவன் வேறு,சகோதரன் வேறு.இது எல்லாமே சுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது.அதுபோல சுவாமிநாதனும்,தாயிடம் மகனாக மட்டும்,மனைவியிடம் கணவனாக மட்டும்,பிள்ளைக்கு தகப்பனாக மட்டும் தங்கைக்கு அண்ணனாக மட்டும் இருக்கமுடியும்அதில் மாற்றம் வந்தால், அதை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது..

 

இதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்…. ஆனால் கடவுள் அப்படி இல்லையே..அவன் எல்லாருக்கும், எல்லாக் காலங்களிலும், எல்லாமுமாய் இருக்கக்கூடியவன் ஆயிற்றே..அவன் ஒருவனுக்கு ஒருமாதிரியும்,மற்றவனுக்கு வேறுமாதிரியும் இருப்பதில்லையே..   அவர் சொன்ன அதே உதாரணத்தை ஹிந்து கடவுள்களுக்கு பொருத்திப் பார்த்தோமானாலும்,அவையும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறதுசிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன், என எண்ணில் அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு… முதலில்,இத்துனை பெயர்களில் வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம் ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!… அப்டீன்னோ, சிவனை, காளின்னோ, ராமனைமாரின்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானேஅவர் கூற்று மெய்யாகும்அப்படி முடிந்தால்தானே….அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும் ஆனால் அது சாத்தியமா?..  

 

 

இல்லையேஎல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னு சொல்பவரேஇப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்! என்ன சொல்வார்அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடாநல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..

திரு ரசீன் அவர்கள் கேட்டது போல, முருகன் சந்நிதானத்தில்  சென்று “இராமா” என்று  கூப்பிட்டு யாரும் வணங்குவது   இல்லை. அப்ப முருகன் வேறு, இராமன் வேறு தானே, இராமனும் முருகனும் , பிள்ளையாரும், காளியும் … எல்லாம் எப்படி ஒன்றே என கருதப் பட முடியும் என்கிற கேள்வியை கேட்கிறார்.

 இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளன. இராமரின் தத்துவமானது மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும்  தியாகத்தின் தத்துவமாக , பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போனறது, கொள்கை  என்பது இடுப்பில் அணியக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை வாழ்ந்து காட்டியவராக, தன மனைவியை தவிர பிற பெண்களை எண்ணாத   விரும்பாத வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டியவராக உள்ளார்.

அனுமனின் கோட்பாடோ, நல்ல கோட்பாடுகளை உடைய ஒரு நல்லவர் , அவர் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்தும், அவருக்கு இத்தனை துன்பங்களா என்று இனி, எந்த ஒரு பிரதிபலனும் கருதாமல் நியாயத்துக்காக போராடிய மாவீரனின் கோட்பாடாக உள்ளது. பதவியையோ, செல்வத்தையோ எதிர்பார்க்கவில்லை அனுமன்.

துர்க்கை, காளி ஆகியோர் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளை எதிர்த்து சீறி, அநியாய அக்கிரமக்காரர்களை கருவறுக்கும் பெண்மையின் வீரத்தை கோட்பாட்டை விளக்கும் வகையில் உள்ளது.

நாட்டை விட்டுக் கொடுத்து காட்டுக்கு சென்ற , ஏக பத்தினி விரதனாக அவதரித்த அதே கடவுள்,    அக்கிரம கொடுங்கோலனை பொறுக்காமல் பெண்ணே சிலிர்த்து  சீறி போராடும் கோட்பாட்டை சொல்லும் போது காளியாக பெண்ணாகத்தான் தானே வடிவெடுக்க முடியும்.

 எனவே ஒருவன்  காளியை வழி படும் போது, “பொம்பளைங்க கைல ராங் காட்டாத நைனா, அவங்களுக்கு கோவம் வந்தா சீறி உன் தலையை சீவிடுவாங்க, கடவுளே அதைக்  காட்ட காளியா வந்துக்குரா” என்கிற சிந்தனையை பெறுகிறான்.

அவனே   இராமர் சந்நிதிக்கு வரும்போது, சீதையை பார்க்கும் போது, ஆண்களின் காமத்தால் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது, இராமனைப் போல மனைவியைத் தவிர பிற பெண்களை இச்சை கொள்ளாமல் வாழ்ந்தால் சமூகத்துக்கு நல்லது என்கிற சிந்தனை நிச்சயம் வரும்.

எனவே ஒரு கடவுள், அவ்வப் போது சூழ்நிலைக்கு ஏற்ப  ஆணாகவும்,  நேரத்தில் பெண்ணாகவும் வடிவெடுத்து வரக் கூடும் என்பதே இதன் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம். 

திரு. ரசீன் எழுப்பிய பிற சந்தேகங்களுக்கான விளக்கத்தை நாம் பிற கட்டுரைகளில் தொடர்ந்து வழங்குவோம்.

(தொடரும்)

Advertisements

20 Responses to "கடவுள் பற்றி இந்துக்களின் புரிதல் சரியா?"

சகோ சுந்தர் அவர்களே,
தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…
மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்…

கடவுள்! ஹிந்துக்களின் புரிதல்…- இந்தக்கட்டுரை,எனது சொந்த கற்பனையை அடிப்படையாகக் கொண்டோ,அல்லது போகிற போக்கில் எதையாவது எழுதிவிட்டு போகும் எண்ணத்திலோ எழுதப்பட்டதல்ல…

அது,ஹிந்து பெரியவர்களாலும்,தங்களைப்போன்ற எனது சக ஹிந்து சகோதரர்களாலும்,பல கடவுள்/ஒரு கடவுள் கொள்கைக்கு அளிக்கப்படும் உதாரணப்பொருளை கருவாகக்கொண்டு எழுதப்பட்டது.

ஹிந்து சகோதரர்கள் பலரும் இந்த முறண்பாட்டிற்கு விளக்கமாக முன்வைப்பது இதைத்தான்… அல்லவா?

எனவே அதை மையப்படுத்தி,அது எத்தனை ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு நெருக்கமானது/தூரமானது என சொல்லி இருப்பேன்…

//ஒன்றை எளிமைப்படுத்தி விளக்க உதாரணப்பொருள்களை துணைகொள்வது சகஜமான ஒன்று.ஆனால் கொடுக்கக்கூடிய உதாரணம் ஆனது அதற்கு சாலப்பொருத்தமானதாக இருப்பது அவசியம்..ஏனெனில் விளங்குபவர் அந்த உதாரணத்தை பிராதனமாகக் கொண்டுதான் அதன் சாயலில் கருப்பொருளை விளங்குவார்.அப்படி இருக்க உதாரணம் பிழையாக இருப்பின் கருவின் மீதான புரிதலும் பிழைபடும் என்பதில் ஐயம் இல்லை….//

எனது இந்தக்கூற்றின் படி,..சொல்லப்படும் உதாரணம் பலகீனப்பட்டுப்போவதால்,அதன் துணைகொண்டு அறியப்படும் பிரதானமும் தவறான பொருள் படுகிறது என்பதைத்தான்…

உதாரணமாக காக்கை எப்படி இருக்கும் என கேட்க,குரங்கை காட்டி,அதோ,இரண்டு கால்,கண்,காது,முடி,வால்,வாய்,எல்லாம் இருக்கல்லவா,இதே மாதிரி காக்கைக்கும் உண்டு,என்றால்?…இந்த உதாரணம் எத்தனை பிழையோ,அத்தகையதுதான் பிரதாப் அவர்களின் உதாரணமும்…

தாங்கள் எனக்கு ஹிந்துக்களின் கடவுள் கொள்கை குறித்து விளக்குவதாக இருந்தால்,நான் எடுத்தாண்டுள்ள அந்த பிரபல உதாரணத்தை விளக்கிச்சொல்லி இருக்கலாம்…

ஹிந்துக்கள் ஒருகடவுளாகவும் பல கடவுளாகவும் காலாகாலமும் வணங்கி வருவதும்,நம்பி வருவதும் நிதர்சனம்.மாற்றுக்கருத்து இல்லை..ஆனால் அதை விளக்க முன்வைப்பப்பட்ட உதாரணத்தில் தான் பிழை.அதன் சாயலில் அதை உணர்ந்தால் கருப்பொருளும் பிழைபடுகிறது என்பதே நான் சொல்லவந்த விஷயம்.

//இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை.//

தாங்கள் மறைமுகமாக சொல்லவருவது இஸ்லாமிய இறைகோட்பாட்டைத்தான்.அதை நேரடியாகவே சொல்லிவிடுங்கள்,எந்த வருத்தமும் இல்லை.நம்முடைய கடவுளை நாம் define பண்ணமுடியாது சகோ..அல்லது எனது கடவுள் இப்படித்தான் இருக்கனும் எனச் சொல்லி,எனக்கு சாதகமான ஒன்றை கடவுளாக உருவகப்படுத்திக்கொள்வது எனக்கு கடவுளாகிடுமா?…

ஹிந்துக்கள் தன் தொழுவத்தில் கட்டிப்போட்டு,அவர்கள் உணவும் நீரும் கொடுத்தால் தான்,தனக்கு ஜீவிதம் என்று இருக்கும் பசுவையும் தெய்வமாகத்தான் வழிபடுகிறார்கள்…பாவம் அது என்ன சொல்லும்???…அது நீ என்னை வணங்குன்னும் சொல்லவில்லை,வணங்காதேன்னும் சொல்லவில்லை..அரவணைப்பேன்னும் சொல்லவில்லை,தண்டிப்பேன்னும் சொல்லவில்லை.

தாங்கள் சொன்ன விளக்கங்களில் பலவித கேள்விகள் தொக்கி நிற்கின்றன.ஆனால் நான் கைகொண்ட கருப்பொருளுக்கு விளக்கம் தந்து, கட்டுரையை முடித்திருந்தால் எனது பதிவுக்கு சரியான பதிலாக இது அமைந்திருக்கும்.முடிந்தால் பிரதாப் அவர்களின் கூற்றை விளக்குங்கள்..அல்லது அது பிழையானது என சொல்லிவிடுங்கள்…அவ்வளவுதான் நண்பரே….

அன்புடன்
ரஜின்

அன்புக்குரிய சகோதரர் ரசின் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

என்னுடைய கட்டுரையில் எந்த உதாரணத்தையும் நான் காட்டவேயில்லை. இனி வரும் கட்டுரைகளில் தான் உதாரணத்தை பயன் படுத்தபோகிறோம்.

இக் கட்டுரையில் நான் அளித்தது நேரடி விளக்கமே.

//சிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன், என எண்ணில் அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு… முதலில்,இத்துனை பெயர்களில் வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம் ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!… அப்டீன்னோ, சிவனை, காளி’ன்னோ, ராமனை…மாரி’ன்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானே…அவர் கூற்று மெய்யாகும்…அப்படி முடிந்தால்தானே….அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும்… ஆனால் அது சாத்தியமா?.. //

இராமர் ஆண், காளி பெண் அப்படி இருவரும் ஒரே கடவுளாக இருக்க முடியும் என்கிற கேள்விக்கு ஒரே கடவுள் அரசை விட்டுத் தரும் , ஏக பத்தினி விரதம் கொண்ட இராஜ குமாரனாக வரும் போது ஆணாகவும்,தன்னைத் துன்புறுத்தும் காமக் கொடூர முரடர்களை தானே எதிர்த்துப் போராடும் கோட்பாட்டை விளக்க காளி என்னும் பெண் னாகவுமே இருக்க முடியும் என்பதி நேரடி விளக்கமாக அளித்து உள்ளோம்.

இதில் என்ன தவறு. இது நேரடி விளக்கம்.

பிரதாப் சொன்னது போல நீங்கள் கடவுள் என்றால் இப்படிதான் இருக்க முடியும், இப்படி இருக்க முடியாது என்ற கட்டாயத்தை வைத்துக் கொண்டு அந்த கோணத்திலே எல்லாவற்ரையும் அணுகுகிறீர்கள் என்றே தோன்றுகிறது .

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் – அவர் கருணை உள்ள, எல்லாம் வல்லவர் என்றால்- அவர் மனிதனாக அவதரித்து மனிதரகளோடு இருக்க விரும்பினால், அதற்க்கு அவருக்கு சுதந்திரமோ, அனுமதியோ இல்லையா? நீ கடவுள்யா, கடவுள் என்றால மேலதான் இருக்கணும், இங்க மனிதர் மாறி உருவம் எல்லாம் இருக்க கூடாது என்று கடவுளுக்கு மனிதன் கட்டளை போட வாய்ப்பு இருக்கிறதா? அதாவது கடவுள் சுதந்திரம் இல்லாதவரா, மனிதரின் விருப்பத்துக்கு ஏற்ப நடக்க வேண்டியவரா? மனிதனுக்கு கடவுள் அடிமை ஆக இருக்க வேண்டுமா?

உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் அளிப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் தந்தால் கட்டுரை மிக மிக நீளமாக இருக்கும் என்பதாலேயே பல கட்டுரைகளாக தருகிறோம். பசு வழிப்பாட்டையும் தனிக் கட்டுரையில் விளக்குவோம்.

//இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை.//
தாங்கள் மறைமுகமாக சொல்லவருவது இஸ்லாமிய இறைகோட்பாட்டைத்தான்.அதை நேரடியாகவே சொல்லிவிடுங்கள்,எந்த வருத்தமும் இல்லை.//

உண்மையில் நான் இஸ்லாத்தை மனதில் வைத்து எழுதவில்லை. இந்துக்கள் பல தெய்வங்களை வழி படக் காரணம் , அவர்களின் எந்த ஒரு தெய்வமும் வேறு யாரையும் வழிபடக் கூடாது என்று சொன்னதாக இல்லை. நாராயணன் சிவனை வழிபடக் கூடாது என்று சொல்லவில்லை. சிவன் இராமனை வழிபடக் கூடாது என்று சொன்னதாக இல்லை. இதனாலே பல் தெய்வ வழிபாடு தடையில்லாமல் பெருகி விட்டது. இதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத் திலேயே சொன்னோமே அல்லாது, இஸ்லாத்தை குறித்து மறைமுகமாக சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்திலே உண்மையிலே எழுதப் படவில்லை.

நீங்கள் சுட்டிக் காட்டும் இந்த கருத்து, இஸ்லாத்தை விட யூத மதத்துக்கே அதிகம் பொருந்தம். “என்னைத் தவிர உனக்கு வேறு தேவர்கள் வேண்டாம், நான் பொறாமை உள்ள தேவன், ஏழு தலை முறைக்கும் வஞ்சம் தீர்ப்பேன்” என்பது போன்ற கருத்துக்களை இஸ்லாம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே போதித்தது யூத மத நிறுவனரான மோசஸ் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். ஆனால் மோசஸ் அவர்களை மனதில் வைத்து கூட இந்தக் கருத்தை சொல்லவில்லை. இந்துக்களின் முக்கிய பண்புகளில் ஒன்று பல தெய்வ வழிபாடு. அதை உங்கள் கட்டுரையில் சொல்லி இருக்கிறீர்கள், இதற்க்கு காரணம் என்ன என்பதை விளக்கவே நாம் இதை எழுதி உள்ளோம்.

மேலும் நீங்கள் கேள்விகளை முன் வைப்பதை நான் குறை சொல்லவில்லை. நீங்கள் இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டதாக கருதவில்லை, அப்படிக் கருதி அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதவில்லை- உங்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையிலே யே கட்டுரை எழுதி இருக்கிறோம். நீங்கள் கூடுமானவரை நிதானமாக வார்த்தைகளை உபயோகப் படுத்தி எழுதி உள்ளீர்கள். அது பாராட்டுக்கு உரியது. அந்த முறையையே பின்பற்றுங்கள்

//தாங்கள் சொன்ன விளக்கங்களில் பலவித கேள்விகள் தொக்கி நிற்கின்றன.//

அன்புக்குரிய சகோதரர் ரசின் அவர்களே,

கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

வணக்கம்
அருமை,அதாவது அவர்களுக்கு புரியாமல் இல்லை.அவர்கள் போல் நாமும் மாற வேண்டும் என்கிறார்கள். எப்படி?
1.எல்லா கடவுள்களின் பெயரும் ஒருவரை குறிக்கின்ற பல் பெயர்கள் என்று சொல்ல வேஎண்டும்.எ.கா அல்லாவிற்கு 99 பெயர்கள் அவை அனைத்துமே அக்கால அரபிகள் வணங்கி வந்த வெவ்வேறு தெய்வங்கள்.திரு முகமது தூக்கி எறியும் முன் காஃபாவில் மட்டும் 360 சிலைகள்[ஒரு நாளுக்கு ஒன்று] இருந்த்ன.
உருவ வழிபாட்டை அகற்றி விட்டால சான்றுகள் அழிந்து விடும்.

2. குறிப்பிட்ட புத்தகம் ,கொள்கையாக்கம் செய்து பிறவற்றை அழித்து விட வேண்டும்.
3.ஆதிகாலம் இருந்தே இப்படித்தான் இருந்தது.இடையில் யூதர்கள்[இங்கே அவர்களை கூறிவிடலாம்!!!!!!!!!] நிழந்து பல தெய்வங்கள்,உருவ வழிபாடு கொண்டு வந்தனர் என்று கூறிவிட்டார்கள் என்றால் புதிய ஏக தெய்வ மதம் ரெடி!!!!!!!!!!!!!!!!.அப்புறம் போர் புரியலாம்,நாடு பிடிக்கலாம்,உலகளாவிய சாம்ராஜ்யம் அமைக்கலாம். வென்றால் செல்வம்,தோற்றால் சொர்க்கம்.

அன்புக்குரிய சகோதரர் திரு. சங்கர் அவர்களே,

வணக்கம்,வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் மிக்க நன்றி.

இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ உலக மக்கள் முற்றாக குறை சொல்லவோ, அவர்களின் வழிபாட்டு முறைகளை தடை சொல்லவோ இல்லை. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி…. உள்ளிட்ட பல இந்திய அறிஞர்கள் இஸ்லாத்தின் ஆன்மீக முறைகளை சரியாக உணர்ந்து கொண்டு அவற்றில் பாராட்டுக்கு உரியவற்றை பாராட்டவும் செய்துள்ளனர்.

ஆனால் அப்பாவிகளாக உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்களை- பிற மதங்களும் இந்த உலகில் இருக்கும், அவற்றின் மீது வெறுப்புணர்ச்சி காட்டாமல் இணக்கமாக வாழ இயலும் – என்கிற பாதைக்கு செல்ல விடாமல் அடிப்படை வாத த்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் தடுக்கின்றனர். இதனால் இஸ்லாமியர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்.

இதனால் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சினை, உலக மக்கள் அனைவருக்கும் பிரச்சினை. ஒவ்வொரு இஸ்லாமியரையும் சந்தேகப் பட்டு செக் பண்ணுகின்றனர். நமது அன்புக்குரிய , மதிப்பிற்குரிய மாண்புமிகு அப்துல் கலாம் ஐயா, அவர் எவ்வளவு நல்லவர், நியாயமான, நடுநிலையாளர், எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகும் பண்பாளர், இந்திய நாட்டின் குடி அரசுத் தலைவராக இருந்தவர் – அவரையே பரி சோதனை செய்கிறான்.

இதை உணர்ந்து மாடெரெட் இஸ்லாமியர், அப்பாவி இஸ்லாமியரை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு சொல்ல முயல வேண்டும், ஆனால் அவர்களும் இந்த உலகில் ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கனவிலே நம்மையும் “திருத்த” முயல்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்ட மான விடயம்.

உங்களின் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி சங்கர்.

நண்பர் சங்கர் அவர்களே!

//அல்லாவிற்கு 99 பெயர்கள் அவை அனைத்துமே அக்கால அரபிகள் வணங்கி வந்த வெவ்வேறு தெய்வங்கள்.//

அல்லாஹ்வின் அனைத்து பெயர்களும்,காரணப்பெயர்களாக சொல்லப்பட்டவை,அதன் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)/அர்ரஹீம்(நிகரற்ற அன்புடையவன்)/அல்ஹாலிக் (படைப்பவன்)/அல்கரீம்(சங்கைமிக்கவன்)/அல்குத்தூஸ் (தூய்மையாளன்)/அல்அஜீஸ்(மிகைத்தவன்)/என்பன….இது தவிர்த்து தாங்கள் சொல்வது போல் அக்கால சிலைகளின் பெயர்களல்ல…அக்கால அரபு சிலைகளின் பெயர்களாக லாத்,உஸ்ஸா,மனாத்,போன்ற பெயர்களை காண முடியும்.அவற்றிக்கு அல்லாஹ்வின் பெயர்க்ளுக்கும் எவ்வித பொருத்தமும் இல்லை…

//அப்புறம் போர் புரியலாம்,நாடு பிடிக்கலாம்,உலகளாவிய சாம்ராஜ்யம் அமைக்கலாம். வென்றால் செல்வம்,தோற்றால் சொர்க்கம்.//

சகோதரர்களே!உங்களுக்கு இஸ்லாம் குறித்து கற்பிக்கப்பட்டவற்றை கண்டு மிகுந்த வருத்தம் கொள்கிறேன்…அன்னப்பறவை எப்படி இருக்கும் என ஒருவர் கேட்க,அதற்கு விளக்கம் சொல்பவர் ஒரு குரங்கை காட்டி,இதோ இரண்டு கால்,கண்,வால்,மூக்கு,வாய்,முடி இதேல்லாம் அன்னப்பறவைக்கும் இருக்கும் என சொல்வாறானால் கேட்டவரின் அப்பறவை குறித்த புரிதல் எப்படிப்பட்டதோ,அப்படிப்பட்டதே இஸ்லாம் குறித்த தங்களின் புரிதல்….

இஸ்லாம் குறித்து பிரபல ஹிந்து தளங்களில் விவாதிக்கப்படும்போது நாம் இஸ்லாம் குறித்த விளக்கங்களை முன்வைக்கிறோம்.சகோதரர்கள் அவர்களது மதம் குறித்து சொல்லும்போது அதில் ஏற்படும் சந்தேகங்களை முன்வைக்கிறோம்.அவ்வளவே…

மற்றபடி,இங்குள்ள மக்களை எல்லாம் முஸ்லீம்களாக மாற்றவேண்டும் என என் தலையில் எழுதவில்லை சகோ.அது என் வேலையும் இல்லை…இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கே பிர மதத்தினர் மீதான தெளிவான எல்லையை நிர்ணயிக்கிறது இஸ்லாம்…

அவர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொல்ல மட்டுமே நமக்கு உரிமை உண்டு..மற்றபடி,அதை ஏற்ப்தும் ஏற்காததும்,அவர்களின் முழு உரிமை..அதை தலையிட கிஞ்சித்தும் உரிமையில்லை எமக்கு…

இது குறித்து,முஹம்மது (ஸல்) நபி அவர்கள்,நான் எத்துனை எடுத்துச்சொல்லியும் இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லையே என ஒரு முறை மிகுந்த துயர் கொண்டு இருக்கும்போது,

இறைவன் நபி(ஸல்) அவர்களை கண்டிக்கிறான்..அவர்கள் மீது நீங்கள் காப்பாளர்களாகவோ,மேற்பார்வையாளராகவோ அனுப்பப்படவில்லை…உங்களது வேலை தூதுத்துவத்தை எத்திவைப்ப்தோடு முடிகிறது என்பதாக…..

அப்படி இருக்க தாங்கள் மேலே சொன்னவை எப்படி சாத்தியமாகும் சகோ…இஸ்லாத்தின் முகவரி அறிய தாங்கள் சென்ற முகவரி முற்றிலும் தவறானது.இஸ்லாம் குறித்து விளக்க எம்மை போன்றோர் இல்லாமல் இல்லை…எத்தகைய கேள்விகளையும், எம்முன் வையுங்கள் பதில் இல்லாமல் இல்லை,என்னிடம் அல்ல இஸ்லாத்திடம்…

அன்புடன்
ரஜின்

//என்கிற கனவிலே நம்மையும் “திருத்த” முயல்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்ட மான விடயம்//

சகோ ஹிந்துமதம் அமேரிக்காவில் பரவுகிறது,ஐரோப்பாவில் விரிகிறது,என்றெல்லாம் தாங்கள் சொல்கிறீர்கள்..அவையெல்லாம் எப்படி?? உங்களது மத போதனைகளை அவர்களுக்கு எடுத்து சொல்வதால் தானே??? அவர்கள் அதை விரும்பி ஏற்கின்றனர்..அல்லவா???

இங்கே தங்களின் இந்த வார்த்தைகளை போட்டு //“திருத்த” முயல்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்ட மான விடயம்//நீங்கள் அவர்களுக்கு எடுத்து சொல்வதை துரதிஷ்டமாக கொள்ளலாமா???

இஸ்லாம்,மற்றும் அதன் கொள்கை விளக்கம் குறித்து நண்பர் ஷங்கர் அவர்களுக்கு போதுமான அளவில் விளக்கம் கொடுத்துள்ளதாக நம்புகிறேன்…அதை உங்களுக்குமானதாக எடுத்துக்கொள்ளுங்கள்….

அதுவே இஸ்லாத்தின் மற்றும் ஒவ்வொரு இஸ்லாமியனின் நிலைப்பாடு…அதை தாண்டிய அத்துனையும் வரம்புமீறல்களே!.அதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததில்லை…..

அன்புடன்
ரஜின்

அன்புக்குரிய சகோதரர் திரு. ரசீன் அவர்களே,

இந்து , கிறிஸ்தவ , இஸ்லாமிய, பவுத்த, … இப்படி அனைத்து சமயத்தினரையும் நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து வருவது நம் தளத்தின் முக்கிய கோட்பாடாக உள்ளது.

இந்து மதம் பற்றி மட்டும் அல்லாது இயேசு கிறித்தவம், இஸ்லாம் இவற்றைப் பற்றியும் பல கட்டுரைகளை இந்த தளத்தில் நான் எழுதி, உலகில் எல்லோரும் ஈத் திரு நாள், கிறிஸ்துமஸ் , தீபாவளி போன்ற விழாக்களில் பங்கெடுப்பது மத நல்லிணக்கத்துக்கு உதவும் என்று எழுதி இருக்கிறோம் . நம்முடைய தளத்திலே தலைப்பிலேயே இஸ்லாத்துக்கு தனி பிரிவு தெரியும். அதிக கிளிக் செய்து படியுங்கள். ரமதான் நோன்பு பற்றியே மூன்று கட்டுரைகள் உள்ளன.

எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று உதவியாக செயல் பட முடியும், எல்லா மதத்தினரும் பிற மதங்களை வெறுப்புணர்ச்சியோடு நோக்காமல் ஆக்க பூர்வமாக அணுக முடியும் என்று சொல்கிறோம். இது தூரதிர்ஷ்டமா?

இஸ்லாத்தைப் பற்றி சொல்லுங்கள், வரவேற்கிறோம், ஏற்க்கனவே மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்கிறோம். ரமதான் நோன்பு நோற்கிறோம். நீங்கள் ஆகஸ்டு மாத வாக்கில் இந்தியா வந்தால் உங்களுடன் சேர்ந்து நோன்பு நோக்க தயார். இது தூரதிர்ஷ்டமா? இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் கடவுள் ஒரே ஒருவராக இருப்பதாக கருதி வணங்குவதை, யாராவது அது எங்களுக்கு ஒப்பில்லை என்று சொல்லுகிறார்களா? தடுக்கிறார்களா?

அப்படியானால் கடவுள் பல வடிவங்களில் இருப்பதாக கருதி வணங்கினால் உங்களுக்கு ஏன் அசவுகரியம் வர வேண்டும்?

கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கோ, அவர் இப்படித்தான் இருக்கிறார் என்பதற்கோ சரி பார்த்துக் கொள்ளக் கூடிய ஆதாரம் எதையாவது யாராவது இதுவரை தந்து இருக்கிறார்களா?

பல தெய்வ வழிபாடோ, ஒரு தெய்வ வழிபாடோ , தெய்வமே இல்லை என சொல்லும் புத்த மதம் போன்றவையோ … எதையாவது அமைதியாக வழி பட்டு விட்டுப் போங்கள், பிற மதங்களை வெறுப்புணர்ச்சியுடன் நோக்க வேண்டாம், உங்களுக்கு உங்கள் மதம் போலத்தான் அவரவர்க்கு அவரவர் மதம் என்று தான் சொல்லுகிறோம்.

அப்படி இருக்கும் போது அந்த ஒரே கடவுள் இயேசு வாக வந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதினால் உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை.அந்த கடவுள் இராமனாக , முருகனாக வந்தார் என இந்துக்கள் கருதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களால் அதைப் பொறுத்துக் கொள்ள, சகித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் தான் இது சரியா, கடவுள் மனிதனாக வர அவரால முடியுமா, என்று எல்லாம் எழுதுகிறீர்கள்.

ஆனால் நீங்கள் கொஞ்சம் பரவாயில்லை, வெளிப்படையாக அடாவடியாக மத வெறியை வெளிப்படுத்தி பரப்பும் சகோதரர்கள் பலர் உண்டு. உங்களைப் போன்றவர்கள் இஸ்லாமிய சமூகத்தவரை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வர இயலும். ஆனால் அதை செய்யாமல் எங்களிடம் வந்து உங்களைப் போல எங்களை ஆக்க முயற்சி செய்கிறீர்கள். அதுதான் துரதிர்ஷ்டம்.

இந்திய மக்கள், இந்திய முனிவர்கள், சித்தர்கள், கிருஷ்ணர், அக்பர், விவேகானந்தர் , காந்தி… பல்லாயிரம் வருடங்களாக கடைப் பிடித்து வந்த சகிப்புத் தன்மையை, நல்லிணக்கத்தை, அரவணைக்கும் போக்கை உலகம் முழுவதும் பரப்ப நாங்கள் முயல்கிறோம். நீங்கள் மத்தியக் கிழக்கு ஆசிய பகுதியில் இஸ்ரவேலர்களால் ஆரம்பிக்கப் பட்ட சகிப்புத் தன்மை மறுப்பு கோட்பாட்டை இங்கே பரப்ப முயற்சி செய்கிறீர்கள். இதுதான் துரதிர்ஷ்டம்.

இந்து மதத்தை அமெரிக்காவில் பரப்புகிறார்கள் … என்றால் இயேசு கிறிஸ்துவை வழிபடாதீர்கள் என்று சொல்லி இந்து மதத்தை பரப்புகிறார்கள? வேறு எந்த மதத்தையாவது திட்டி கண்டித்து பேசுகிறார்களா?

நீங்கள் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பேசிய பேச்சுக்களை படித்துப் பாருங்கள். இந்து மதத்தின் சார்பாக பேச சென்ற அவர், இந்து மதத்தின் சிறப்பை விளக்கியதோடு எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன, எல்லா மதங்களும் சிறந்த ஆன்மீகவாதிகளை தந்துள்ளன என்று சொல்லி, மத நல்லிணக்க சபையாக அதை ஆக்கினார்.

எனது கடவுள் இப்படித்தான் இருக்கனும் எனச் சொல்லி,எனக்கு சாதகமான ஒன்றை கடவுளாக உருவகப்படுத்திக்கொள்வது எனக்கு கடவுளாகிடுமா?…

ஆகும்.

அன்புக்குரிய சகோதரர் திரு. ஜோ. அமலன் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நீங்கள் சொல்லுவதை இன்னும் விளக்கமாக சொன்னால் அனைவரும் புரிந்து கொள்வோம்.

கடவுளுக்கு உருவம் இருக்கக்கூடாது என்று சொல்ல நாம் யார்? இப்படித்தான் என்னை வழிபட வேண்டும் என்று கடவுளே சொல்லாத போது அதைப் பற்றி நமக்கென்ன கவலை.

http://hayyram.blogspot.com/2009/03/blog-post.html

Steps to Spritual :- ‘Esavasyam Itham Sarvam’ – ‘All are god here’ (or) ‘Everything here is divine’ , ‘Thath Thvam Asi’ – ‘U are being That’ , ‘Aham Brahmma Asmi’ – ‘I am the God’

இதைப் புரிந்து கொண்டால் சுலபம். ஆனால் இவற்றை புரிந்து கொள்ளும் நிலையில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இருப்பதில்லை. அவர்களுக்கு கடவுள் புறப்பொருள். அவ்வளவே!

தாங்கள் இதை படிக்கவில்லை என நினைக்கிறேன்….

//சகோதரர்களே!உங்களுக்கு இஸ்லாம் குறித்து கற்பிக்கப்பட்டவற்றை கண்டு மிகுந்த வருத்தம் கொள்கிறேன்…அன்னப்பறவை எப்படி இருக்கும் என ஒருவர் கேட்க,அதற்கு விளக்கம் சொல்பவர் ஒரு குரங்கை காட்டி,இதோ இரண்டு கால்,கண்,வால்,மூக்கு,வாய்,முடி இதேல்லாம் அன்னப்பறவைக்கும் இருக்கும் என சொல்வாறானால் கேட்டவரின் அப்பறவை குறித்த புரிதல் எப்படிப்பட்டதோ,அப்படிப்பட்டதே இஸ்லாம் குறித்த தங்களின் புரிதல்….

இஸ்லாம் குறித்து பிரபல ஹிந்து தளங்களில் விவாதிக்கப்படும்போது நாம் இஸ்லாம் குறித்த விளக்கங்களை முன்வைக்கிறோம்.சகோதரர்கள் அவர்களது மதம் குறித்து சொல்லும்போது அதில் ஏற்படும் சந்தேகங்களை முன்வைக்கிறோம்.அவ்வளவே…

மற்றபடி,இங்குள்ள மக்களை எல்லாம் முஸ்லீம்களாக மாற்றவேண்டும் என என் தலையில் எழுதவில்லை சகோ.அது என் வேலையும் இல்லை…இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கே பிர மதத்தினர் மீதான தெளிவான எல்லையை நிர்ணயிக்கிறது இஸ்லாம்…

அவர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொல்ல மட்டுமே நமக்கு உரிமை உண்டு..மற்றபடி,அதை ஏற்ப்தும் ஏற்காததும்,அவர்களின் முழு உரிமை..அதை தலையிட கிஞ்சித்தும் உரிமையில்லை எமக்கு…

இது குறித்து,முஹம்மது (ஸல்) நபி அவர்கள்,நான் எத்துனை எடுத்துச்சொல்லியும் இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லையே என ஒரு முறை மிகுந்த துயர் கொண்டு இருக்கும்போது,

இறைவன் நபி(ஸல்) அவர்களை கண்டிக்கிறான்..அவர்கள் மீது நீங்கள் காப்பாளர்களாகவோ,மேற்பார்வையாளராகவோ அனுப்பப்படவில்லை…உங்களது வேலை தூதுத்துவத்தை எத்திவைப்ப்தோடு முடிகிறது என்பதாக…..//
————————————————————————————————————————————————-
// “திருத்த” முயல்கின்றனர் என்பதுதான் துரதிர்ஷ்ட மான விடயம்//

நாங்கள் உங்களை திருத்த முயல்கிறோம் என்ற கனவில் தாங்கள் இருந்தால்,தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள்…

அது தவிர,தாஙகள்,என்னை நோக்கி பிரயோகித்த ஒரு வார்த்தையை,உங்களை நோக்கி நான் பயன்படுத்தும் போது,ஏன் இத்தனை கொந்தளிக்க வேண்டும்.அந்த வார்த்தையை தாங்கள் எனக்கு பொருத்தி அழகு பார்க்க முயற்சிக்கும் போது,அதே வார்த்தை நம்மீது விழுந்தால் நாம் எப்படி எதிர்கொள்வோம் என்பதை சிந்தித்து உபயோகிக்கலாம்.

ஒரு கற்பனையான வாதத்தை முன்வைத்து,அதைக் கொண்டு,துரதிஷ்ட்டவசமானது என தாங்கள் சொல்லும்போது,அதே நிகழ்வை சுட்டி நான் உங்களுக்கு அதை திருப்பக்கொடுத்தால் ஏற்க தங்கள் ”சகிப்புத்தன்மை” மறுக்கிறது.கொட்டித்தீர்த்து விடுகிறீர்கள்…

நாம் தங்களை போல் பேசாததால்.அது எம்மால் ஏற்கப்பட்டது என்றோ,அல்லது எம்மை அது பாதிக்கவில்லை என்றோ எண்ணம் கொண்டிருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்…

இஸ்லாத்தை முழுக்க முழுக்க காழ்ப்புணர்வோடு,வக்கிரமாக திட்டித்தீர்ப்பதையே முழுநேர ஊழியமாக கொண்ட எத்தனை ஹிந்து தளங்களை நான் உங்களுக்கு காட்டட்டும்…வலையில் விரவிக்கிடக்கின்றன..ஹிந்து மதத்தை பழிக்கும் தளங்கள் உதாரணமாக பத்து இருந்தால் அதில் 8 ஹிந்துக்களாலும்,நாத்தீகர்களாலும்,எஞ்சியவை பிறமதத்தினராலும் செய்யப்படுகிறது….

ஆனால் இஸ்லாமிய விமர்சனம் என்றால் 10ல் 8 ஹிந்துக்களே மீதம் பிறமதத்தவரும்,நாத்தீகர்களும்,ஏன் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் செய்கின்றனர்…

எம்மை போன்றவர்களை விதைப்பதே இத்தகைய தளங்கள்தான்….ஆனால் நாம் அதை ஆக்கப்பூர்வமாக அணுகுகிறோம்….அதை குறித்து விளக்க எங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறோம்…இதுதான் இஸ்லாம்…

பதிலுக்கு திட்டித்தீர்க்க இஸ்லாம் எம்மை பழக்கவில்லை,மாறாக தடைசெய்கிறது…

உங்களுக்கு இஸ்லாம் என்றாலே,தாலிபான்,ஒசாமாவை தவிர யாரும் கண்ணுக்கு தெரிவதில்லை…உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறோம்…

இன்று உலகில் இஸ்லாம் அதிவேகமாக பரவி வருவதாக கணிப்புகள் சொல்கின்றன..குறிப்பாக அமேரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்…இங்கேல்லாம் என்ன கட்டாய மதமாற்றம் நடக்கிறதா?இல்லை வாள் ஏந்தப்படுகிறதா? இல்லை மாற்றம் பெறுபவர்கள் எல்லாம் முட்டாள்களா?

நீங்கள் சொல்லலாம்,அவர்களெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்று…உலகையே ஆளும் திறன் கொண்ட அமேரிக்க மக்கள்,மேற்கத்தியர்கள் அத்துனை மூடர்கள் என சொல்வது அறியாமையின் வெளிப்பாடே அன்றி வேறல்ல,….

இன்று இஸ்லாமியர்களை பல நாடுகளில் அழித்தொழிக்க முக்கிய காரணியாக இருந்த டோனி ப்ளேயர் தினமும் குரான் படிக்கிறாராம்…அவரையும் நாம் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறோம் என்று நாளை நீங்கள் சொல்லலாம்…

இஸ்லாத்தை ஏற்ற டோனி ப்ளேயரின் உறவினர் ஊடகவியலாளர் திருமதி லாரன் பூத் அவர்களை யார் மாற்றியது??? இப்படி எத்தனை பிரபலங்களை காட்டடும்.அவர்களெல்லாம் பாமரர்களா??? இல்லை கட்டாயத்தால் ஏற்றவர்களா???

http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_20.html
நேரம் இருந்தால் இதை படித்துப்பாருங்கள்….

உங்களது எண்ண ஓட்டம் இஸ்லாம் குறித்தும்,முஸ்லிம்கள் குறித்தும் fix செய்யப்பட்டுவிட்டது…அது அத்துனை எளிதில் மாற்றம் பெறுவது கடினமே…அதற்கு ஒரு வகையில் முஸ்லிம்களும் காரணம் ஆகின்றனர்….

அன்புக்குரிய சகோதரர் திரு. ரசீன் அவர்களே,

நீங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியதாக நான் சொல்லவில்லை.

ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்களோ, அதே போல இந்துக்கள் ஒரே கடவுள் நல்லவர்களைக் காக்க பல முறை இந்த உலகில் அவதாரம் எடுப்பதாக இந்து நம்புகிறான். எல்லாமே நம்பிக்கை தான் , எந்த ஒரு நம்பிக்கைக்கும் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இல்லை, ஆனாலும் ஏதோனும் ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு அமைதியாக தொழுவதானால் அதனால் சமூகத்துக்கு பிரச்சினையில்லை.

நீங்கள் ஒரே கடவுள் இருக்கிறார் என்று நம்புவதையோ, அவரை தொழுவதையோ யாரவது குறை சொல்கிறார்களா? வெறுக்கிறார்களா? இல்லையே.

அதே போல ஒரே கடவுள் பல அவதாரங்களை எடுப்பதாக் கருதிக் கொண்டு, இராமர், கிருஷ்ணர், சிவன், முருகன் … இப்படி பல கடவுள்களை யோ, மேரி மாத, இயேசு கிறிஸ்து இப்படி பலரை வணங்குபவர்கலையோ பார்க்கும் போது உங்களுக்கு மனதில் அசௌகரியமோ, என்னடா இவங்க இப்படி, உருவம் இல்லாத ஒரே கடவுளை வணங்குவதை விட்டு விட்டு, பல உருவங்களில் கடவுள் வருவதாக கருதி வழிபடுகிறார்களே என்று வருத்தமோ, கடுப்போ, வெறுப்போ உண்டாகிறதா? அப்படி எதுவும் உண்டாகவில்லை, நாம நம்ம கடவுள்னு நம்புபவரை தொழுவதைப் போலத்தான் அவர்களும் அவர்கள் நம்புபவரை தொழுகிறார்கள், சரி அவங்க மனத் திருப்தியாக தொழுது கொள்ளட்டும் என்று இயல்பாக எடுத்துக் கொள்கிறீர்களா? இதை முதலில் தெளிவு படுத்துங்கள்.

அல் குர்ஆன் நூலை மொழி பெயர்ப்புடன் படித்து வருகிறோம். எனினும் நீங்கள் இஸ்லாத்தை பற்றி எங்களுக்கு சொல்லலாம். எந்த வகையில் நாங்கள் இஸ்லாத்துடன் நல்லிணக்கமாக இருக்க முடியுமோ அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லுங்கள். அதை விட்டு எந்த வகையில் பிணக்கு உருவாகுமோ அந்த கருத்துக்களை முன்னிலைப் படுத்தி ஆவது என்ன? மேலும் நாங்கள் இஸ்லாத்துடன் நல்லிணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். தொழுகையில் கலந்து கொள்கிறோம், நோன்பு நோக்கிறோம் என்பதை எல்லாம், முன்பே சொல்லி இருக்கிறோம்.இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டு இருந்தேன், அதற்க்கு பதில் இல்லை.

நான் உங்களுக்கு தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நானும் இஸ்லாத்தை ஆழமாக ஆராய்ந்து வருகிறேன் என்பதே. இஸ்லாத்தில் சிறப்பான ஆன்மீகக் கருத்துக்கள் உள்ளன, இஸ்லாமியர்களை அந்த ஆன்மீகப் பாதையில், பயணிக்க வூக்குவிக்க வேண்டும் அதை விட்டு நீ இதைக் கும்பிடு, அதைக் கும்பிடாதே, இப்படிக் கும்பிடு, என்று பிறருடன் வழக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாதையில் செல்ல வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். இஸ்லாத்தின் ஆன்மீகம் என்பது பற்றி விரைவில் கட்டுரை நம்முடைய தளத்தில் வெளியாகும்.

அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது, ஐரோப்பாவில் இஸ்லாம் பரவுகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்லுகிறீர்கள், அங்கெல்லாம் பெரிய அளவில் மத மாற்றங்கள் நிகழ்ந்து மில்லியன் கணக்கில் மக்கள் மதம் மாறி இஸ்லாத்தில் சேருவதாக வைத்துக் கொண்டாலும், அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது.

அமெரிக்கரோ, ஐரோப்பியரோ … யாராக இருந்தாலும் சரி- அவர்கள் கிறிஸ்துவராக இருந்தாலும் சரி,இஸ்லாமியராக இருந்தாலும் சரி – அவர்கள் சகிப்புத் தன்மை உள்ளவர்களாக, பிற மதங்களின் மேல் வெறுப்புணர்ச்சி இல்லாதவராக இருக்கிறார்களா என்பதைப் பற்றியே எமக்கு அக்கறை, அமெரிக்கர் இஸ்லாமியராக இருந்தாலும், கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும் அவர்களை நல்லிணக்கப் பாதிக்கு கொண்டுவருவதே எங்கள் முயற்சி.

//இன்று உலகில் இஸ்லாம் அதிவேகமாக பரவி வருவதாக கணிப்புகள் சொல்கின்றன..குறிப்பாக அமேரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்…இங்கேல்லாம் என்ன கட்டாய மதமாற்றம் நடக்கிறதா?இல்லை வாள் ஏந்தப்படுகிறதா? இல்லை மாற்றம் பெறுபவர்கள் எல்லாம் முட்டாள்களா?//

இதை எல்லாம் நாங்கள் ஆரம்பிக்கவேயில்லை. நீங்களாக வாள் முனையில் பரப்பவில்லை என்று எல்லாம் எழுதி குதிருக்கு உள்ள இல்லை என்று சொல்வது போல உள்ளது. இஸ்லாம் வாள் முனையில் பரப்பப் பட்டதா என்றபது பற்றி நான் விவாதிக்க ஆரம்பிக்கவில்லை. இதை ஆரம்பித்தது நீங்கள் தான். அப்புறம் வண்டி எங்கோ போகிறது என்பீர்கள். இஸ்லாம் எப்படிப் பரப்ப பட்டது என்பதற்கு முதலில் இஸ்லாம் எப்படி உருவாகியது , அரேபியாவில் எப்படி நிலை நிறுத்தப் பட்டது, ஸ்பெயினில் எப்படி இஸ்லாம் பரவியது என்பது, இரானில், இங்கே எப்படி இஸ்லாம் பரவியது…. எல்லாம் இஸ்லாமியர் உட்பட எல்லோருக்கும் தெரியும். வாளெடுத்து இஸ்லாமியர் அல்லாதவரோடு போரிட்டு அவர்களை வென்று, வேற்று மதத்தவருக்கு ஜிசியா வரி போட்டால் , வரி கட்ட முடியாட ஏழை வழியற்று மாறியது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

வாளை உபயோகப் படுத்திய போது இஸ்லாம் எவ்வளவு வேகமாப் பரவியது, இப்போது அதே வேகத்தில் பரவுகிறதா என்பது எல்லாம் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

//இஸ்லாத்தை ஏற்ற டோனி ப்ளேயரின் உறவினர் ஊடகவியலாளர் திருமதி லாரன் பூத் அவர்களை யார் மாற்றியது??? இப்படி எத்தனை பிரபலங்களை காட்டடும்.அவர்களெல்லாம் பாமரர்களா??? இல்லை கட்டாயத்தால் ஏற்றவர்களா???//

டோனி பிளேர் செகரடேரி மாறினால் என்ன, அவரோடு ஒரு லக்ஷம் பேர் மாறினார்களா, மாத மாதம் பிரிட்டனில் ஐம்பதாயிரம் பேர் மாறிக் கொண்டு இருக்கிறார்களா? உண்மையில் ஓரளவுக்கு அமெரிக்கரும், ஐரோப்பியரும் இஸ்லாத்துக்கு வந்தால் கூட அதுவும் ஒரு வகையில் நல்லதே. இருபத்தொராம் நூற்றாண்டை சேர்ந்த அமெரிக்கனோ, ஐரோப்பியனோ, இஸ்லாத்துக்கு வந்தால் கூட ஓரளவுக்காவது சகிப்புத் தன்மையை மனதில் வைததவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் பிற பகுதிகளில் உள்ள முஸ்லீம்களையும் சகிப்புத் தன்மை உள்ளவர்களாக மாற்ற வாய்ப்பு உள்ளது.

திருமதி. லாரன் பூத்தை உதாரணம் காட்டுகிறீர்களே, இந்திய வரலாற்றின், உலக வரலாற்றின், மிக முக்கிய மாமன்னர்களில் ஒருவர் ஜலாலுதீன் முகம்மது அக்பர் , அவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

முகமது (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) இஸ்லாத்தை ஏற்காத அரேபிய பழங்குடியினரோடு போரிட்டார் என்றால், அந்தப் பகுதியில் அக்காலத்தில் அக் கால பாலைவன மக்கள், மோதல் போக்கை கடைப் பிடித்து வந்தனர். இஸ்ரேலியர் உட்பட அனைவரும் எவன் வாளை உயர்த்தி அடிக்கிறானோ, அவன் மதம் தான் நிற்கும், அவன் இனம் தான் வாழும் என்கிற நிலையில் முகமது( (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) க்கு வேறு வழியில்லை. எனவே அக்காலத்தில் அப்பகுதியில் சகிப்புத் தன்மை மறுப்பு, மத ரீதியிலான போர்கள், அதட்டல் மிரட்டல் இவை எல்லாம் உருவாகின.

இந்தியாவில் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே இங்கே ஆன்மீகப் புரட்சி நடத்திய கவுதம புத்தர், ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் வாளையோ, வேறு எந்த ஆயுதத்தையோ எடுக்கவும் இல்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் மத்தியக் கிழக்கு ஆசியப் பகுதியில் கற்கால போக்கு மனிதரை பக்குவப் படுத்த உருவான கண்டிப்பான கருத்துக்களை இங்கே அப்பாவி மக்கள் தலையில் கட்ட முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்காது .

ஜெருசேலம் எங்களுக்கு தான் சொந்தம், என யூதர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் நடத்திய போர்கள்- ” புனிதப்” போர்கள என்று சொல்லிக் கொள்ளும் அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போரிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். யார் எழுதுவது துரதிர்ஷ்டம் என்பதை நடுநிலையான சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வார்கள். கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து, பவுத்தர் உள்ளிட்ட யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட படி அவர்கள் செயல்பாடு உள்ளது. அதனால் தான் நாங்கள் அனைவருக்கும் சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் சிறப்பை சொல்லிக் கொடுக்கிறோம். யார் வேண்டுமானாலும், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றிக் கொள்ளலாம், பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி வேண்டாம், அது அபாயகரமானது என்பதையும் அனைவரிடமும் எடுத்து விளக்குவோம்.

//…உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறோம்…//

150 மில்லியன் முஸ்லிம்கள் அல்ல, 1500 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர் !

அப்படிப் பார்த்தல் சீன அரசு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால், சீனர்களுக்கு புத்தரின் மேல் உள்ள அன்பும், மரியாதையும் தெளிவாக தெரிய வரும், உலகில் பவுத்தர்களின் எண்ணிக்கை 2000 மில்லியனையும் தாண்டி இருப்பது தெரிய வரும்.

நான் சங்காய் சென்ற போது, சீன நபர் ஒருவரிடம் புத்தரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றேன். அவர் எனக்கு புத்தரை தெரியாது என்று சொல்லி விட்டார். பிறகு நான் அவருடன் ஒரு புத்தக கடைக்கு சென்ற போது, புத்தரின் படம் இருந்த புத்தகத்தைக் காட்டி, இவர்தான் புத்தர் என்றேன். ஓ, ஹி இஸ் சாங்க்ய முனி, மை மதர் ஒர்ஷிப் ஹிம், என்றார். சாங்கிய முனி (புத்தரை) பற்றி சொல்லும் போது , அவர் முகத்தில் தோன்றிய மரியாதையும் , ஆர்வமும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

இஸ்லாத்தை நாங்கள் சரியாகப் புரிதல் செய்கிறோம். இஸ்லாத்தையோ, இஸ்லாமியரையோ நாங்கள் வெறுக்கவில்லை. இஸ்லாத்தை அமைதியாகப் பின்பற்ற இயலும், அதை விட்டு விட்டு பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்று எண்ணி அவற்றை வெறுக்க வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக,எனது பதிவை அப்பட்டமாக தவறாக புரிந்து கொண்டீர்கள் என்பது தெளிவாகிறது….

நான் ஹிந்து மதத்தில் பல தெய்வக்கொள்கையையோ,ஒரு தெய்வ கொள்கையையோ,அல்லது இரண்டின் கலப்பையோ,நான் அந்த பதிவில் விமர்சித்து இருக்கமாட்டேன்…

அதற்காக கொடுக்கப்பட்ட உதாரணப்பொருள் தவறு,பொருத்தமானதாக இல்லை….என்பதே நான் சொல்லவந்த கருத்து….ஹிந்துக்களின் வழிபாடு தவறானது,அப்படி இப்படின்னா விமர்சித்து இருந்தேன்????

Quote from my article:
//ஒன்றை எளிமைப்படுத்தி விளக்க உதாரணப்பொருள்களை துணைகொள்வது சகஜமான ஒன்று.ஆனால் கொடுக்கக்கூடிய உதாரணம் ஆனது அதற்கு சாலப்பொருத்தமானதாக இருப்பது அவசியம்..ஏனெனில் விளங்குபவர் அந்த உதாரணத்தை பிராதனமாகக் கொண்டுதான் அதன் சாயலில் கருப்பொருளை விளங்குவார்.அப்படி இருக்க உதாரணம் பிழையாக இருப்பின் கருவின் மீதான புரிதலும் பிழைபடும் என்பதில் ஐயம் இல்லை….//

//உதாரணம் பிழையாக இருப்பின் கருவின் மீதான புரிதலும் பிழைபடும் என்பதில் ஐயம் இல்லை….//கருவின் மீதான ”புரிதல்”புரிதல்”புரிதல்” பிழைபடும் என்றுதானே சொன்னேன்…கருவே பிழை என்றா சொன்னேன்????கருவை விவாதிக்கவே இல்லையே….நிதானமாக படியுங்கள்…

வழக்கம் போல் ஹிந்துமதத்தை பற்றி முஸ்லிம் எழுதினால் காழ்ப்பாகத்தான் இருக்கும் என்ற உங்களின் கணிப்பும் பார்வையும் இங்கு பொய்யாகிறது..அதை எனது பதிவின் ஆரம்பத்திலே தெளிவு படுத்தி இருப்பேன்…but…!!!!

நான் மையப்படுத்தி எழுதிய உதாரணம் பொருத்தமாக இல்லை…அது எப்படி பொருத்தமானது என சொல்லுங்கள்,ஒருவேலை நான் இன்னும் விளக்கம் பெறவேண்டி இருக்கலாம்…..

அதை விடுத்து,அது உது இத்யாதிகள் எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றே,,,,,…நாம் விவாதித்தது உதாரணப்பொருள் குறித்தே….

அதை விட்டு எங்கோ வண்டி போகிறது….

அன்புடன்
ரஜின்

இராமனும், காளியும் ஒன்றா, ஒரே கடவுள் எப்படி ஆணாகவும் , பெண்ணாகவும் இருக்க முடியும் என்கிற உங்களின் கேள்விக்கு நேரடியான பதிலை கட்டுரையில் அளித்து விளக்கமாக எழுதி இருக்கிறோம்.

இன்னும் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அடுத்த கட்டுரைகளில் வெளியிடப்படும். எனவே வண்டி சரியான திசையிலே செல்லுகிறது.

நீங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி இருப்பதாக கருதினால் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு இருப்போமா? உங்களின் நடையை பலரும் பாராட்டியே உள்ளனர்.

அன்புக்குரிய நண்பர் ரசீன் அவர்களுக்கும் திருச்சிக்காரன் அவர்களுக்கும்
அன்பு வணக்கங்கள்.
சகோதரர் ரசீன் அவர்களின் சந்தேகத்துக்கு என்னால் இயன்ற அளவில் பதில் கூற முனைகிறேன்.
உங்கள் பதிவுகளை கவனமாக படித்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இஸ்லாத்தை பற்றி
உங்கள் தெளிவான பார்வையும், அதே சமயம் பிற மார்கத்தவர் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பும்
…மிக்க மகிழ்ச்சி நண்பரே.
உங்கள் கேள்வி. முதலில்,இத்துனை பெயர்களில் வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்???
பதில் : மிகவும் சுலபம். அதுதான் எல்லாம் வல்ல பரம்பொருள்.
பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்த வடிவம் அவன்.
அப்படி என்றால் அவனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
ஒரு உதாரணம் சொல்கிறேன். சகோதரர் ரசீன் அவர்களே. நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மகன். மூத்த சகோதரருக்கு
தம்பி. இளையவருக்கு அண்ணன். மாமனுக்கு மருமகன். மனைவிக்கு கணவன். குழந்தைக்கு தந்தை. இல்லையா.
அலுவலகத்தில் மேலதிகாரிக்கு பணியாள். உங்களுக்கு கீழிருக்கும் அலுவலருக்கு மானேஜர்.
பெற்றோர் உங்களை ரசீன் என்று அழைப்பார்கள். சகோதரர்கள் தம்பி என்றும் அண்ணா என்றும் விளிப்பார்கள்.
மாமன் மருமகனே என்றும் மனைவி அவருக்கு உரிய நெருக்கமான உறவுமுறையில் ஒரு பெயர் சொல்லியும், குழந்தைகள்
வாப்பா என்றும் மேலதிகாரி உங்கள் பெயர் சொல்லியும், கீழ்ப் பணியாளர் “சார்” என்றும் அழைப்பார்கள்.
ஆனால் நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களை யார் எப்படி அழைத்தாலும் (சில சமயம் நம் நெருங்கிய நண்பர்கள்
பட்டப்பெயர் கூட வைத்து அழைப்பார்கள்) நீங்கள் ரசீன் என்பது மட்டும் மாற்ற முடியாத ஒன்று அல்லவா?
அதுபோலவே எந்தப் பெயரில் அழைத்தாலும் கடவுள் கடவுள் தான்.
நீங்கள் சொல்லலாம். உங்கள் உதாரணம் சரி இல்லை மணியன். எனக்கு ஒரு வடிவம் தான் . ஆனால் உங்கள் கடவுள்கள்
அப்படி அல்லவே. விநாயகருக்கு ஒரு தோற்றம், முருகனுக்கு ஒரு தோற்றம், சிவனுக்கு வேறொன்று. அப்படி இருக்க
அனைத்தும் ஒன்று என்று எப்படி சொல்லமுடியும்? என்றும் கேட்கலாம்.
இதற்கான பதில் .. அடுத்த இடுகையில் தொடர்கிறது.

நண்பர்களே. மனித மனம் பல விதமானது. ஒருவருக்கேற்ற சிந்தனை இன்னொருவருக்கு இல்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். எண்ணங்கள் முதல் – தேட்டங்கள் வரை ஒருவருக்கு இருப்பது போல இன்னொருவருக்கு
இருப்பது இல்லை.
அது மட்டும் அல்ல. அந்த மனமும் நாலாவிதமும் அலைபாயும் தன்மை கொண்டது.
இஸ்லாமியாரான நீங்கள் தினமும் ஐந்துவேளை தொழுகை நடத்தும் வழக்கம் கொண்டவர். நான் கேட்பதை தவறாக
கருதாமல் உங்கள் மனசாட்சியை தொட்டுப்பார்த்து பதில் கூறுங்கள். அந்த தொழுகையில் ஈடுபடும் பொழுது உங்கள் மனம்
அங்கு இங்கு என்று அலைபாயாமல் அப்படியே இறைதத்துவத்தில் லயிக்கிறதா? உங்களை குறை கூறுவதாக தயவு செய்து
கருதவேண்டாம் சகோதரா. ஏன் சொல்கிறேன் என்றால் மனம் இறைவனிடம் முழுமையாக லயிக்கும் என்று சொல்ல முடியாது.
அது தான் ஒரு குரங்காயிற்றே. இரண்டு நிமிடம் இருப்பது போல இருக்கும். அடுத்த நொடி வேறு எங்காவது சென்று விடும்.
அல்லது அந்த மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகள், கவலைகள் அவற்றை சிந்திக்க ஓடிவிடும். சரி என்று அதை அப்படியே
எந்த குப்பைத்தொட்டிக்கு வேண்டுமானாலும் போ என்று விட்டுவிடுவதா.? அதற்கு தான் இந்து மதம் இப்படி ஒரு வழியாக
பல தெய்வ வழிபாட்டை வைத்திருக்கிறது.
கோவிலுக்கு போகிறோம். முதலில் விநாயகர் சந்நிதி வருகிறது. ஒரு இரண்டு நிமிடம் அவரிடம் லயிக்கும் மனது அப்படியே
அடங்காமல் மேயத்தொடங்கி விடுகிறது. நமக்கும் சஞ்சலம் வருகிறது. அடடா. நான் தொற்றுவிட்டேனா. இறைவனிடம் என்
மனம் ஒரு இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்கமாட்டேன் என்கிறதே. என்ன செய்வது என்று வருந்தும் வேளையில், “அட என்னப்பா இது இந்த விநாயகர் வடிவில்
உன் மனம் லயிக்கவில்லையா. கவலைப்படாதே. அடுத்தாற்ப்போல இருக்கிறது பார் முருகன் சந்நிதி :அவன் அழகின் உறைவிடம். அங்கு ஒரு இரண்டு நிமிஷம்.
அடுத்தாற்போல பார் அம்பாள் . நமக்கெல்லாம் தாயார். அவரை வணங்கி ஒரு இரண்டு நிமிஷம். சிலருக்கு அம்பிகையின் மீது அலாதி ப்ரியம். சிலருக்கு
முருகன் வடிவின் மீது மாறாத பிரேமை. ஆகவே ஒவ்வொருவரின் மனப் பக்குவத்துக்கு ஏற்றார்போல இரண்டு இரண்டு நிமிஷங்கள் என்று அரை மணிநேரம்
ஒரு கோவிலை சுற்றி வரும் வேளையில் அங்கு உள்ள பலதரப்பட்ட ரூப வடிவங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனதிற்கேற்ற படி இறை தத்துவத்தில்
முழுமையாக ஈடுபட வைத்து சாந்தியும் நிம்மதியும் நிறைவும் கொடுக்கின்றன.

அதாவது இனிப்பிலேயே பல வகைகள் உண்டே. ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜிலேபி,

அடுத்தவருக்கு பாயாசம் என்று ஒவ்வொருவரும் அவரவர் ருசிக்கும் ரசனைக்கும் ஏற்றதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் எல்லாம் ஒரே மூலப்பொருளால் ஆனது தானே. உண்பதற்கும் உடுப்பதற்கும் விரும்புவதை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு அல்லவா? அந்த உரிமையை இறைவனை வணங்குவதற்கும் இந்து மதம் அளித்திருக்கிறது.

அன்புக்குரிய சகோதர்கள் திரு.மணியன், திரு. ராம் அவர்களே,

உங்களின் வருகைக்கும் , விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

ஹிந்து நண்பர்களே௃ கடவுள் குறித்து ஹிந்து வேதங்கள் சொல்வதை கேளுங்கள்.
ஷவதேஷ்வத்தார உபநிஷத்(அத்தியாயம்-6,வசனம்-9)஥கடவுளுக்கு பெற்றோரும் இல்லை,எஜமானும் இல்லை௃அப்படியாயின் கடவுளுக்கு குழந்தை,பெற்றோர் என அழைப்பது ஏன்௟ஷ்வேதஷ்வத்தார உபநிஷத்(அத்-4,வச-20)஦஠இறைவன் பார்வைக்கு அப்பாற்பட்டவன்,அவனை யாரும் கண்கனால் காண முடியாது஠அவ்வாறெனின் கடவுளுக்கு உருவம் கற்பிப்பது எவ்வாறு௟இந்து வேதத்தின் பிரம்ம சூத்திரம்஛இறைவன் ஒருவன்,அவனன்றி வேறு இறைவன் இல்லை,இல்லை,இல்லை இல்லவே இல்லவே இல்லை,இன்னொரு இறைவன் ஒரு போதும் இல்லை஠அப்படியாயின் பல கடவுள் கொள்கையை பின்பற்றுவது ஏன்௟இவ்வாறு ஹிந்து வேதங்களில் இருந்து பல தகவல்கலை கூர முடியும்.சிந்தித்து உணருங்கள்.வேதத்தை சறியாக பின்பற்றுங்கள.உண்மையை அறியுங்கள்.நான் கூறிய விடயங்கள் யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.உண்மையை கூறுவதே என் கடமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: