மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட, நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன் – சுவாமி விவேகானந்தர் சாட்டை!
Posted January 27, 2011
on:
1897ம் வருடம், பிப்ரவரி மாதம் 9ம் நாள் காலை, திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில், சுவாமி விவேகானந்தர், “நம் முன்னே உள்ள பணி” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி:
ஆன்மீக சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்து விடக் கூடாது.
உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீக சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர நாம் நெஞ்சோடு நெஞ்சாக பற்றிக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை அல்ல.
அந்த மூட நம்பிக்கைகளை ஒரேயடியாக இந்த மண்ணில் இருந்தே பிடுங்கி எறிய வேண்டும். அவை மீண்டும் தலை எடுக்கவே கூடாது.
இந்த மூட நம்பிக்கைகள்தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணம். நம் மூளையை பலவீனப் படுத்துவதும் இவைதான்!
உயரிய கருத்துக்களைச் சிந்திக்கும் திறன் அற்ற, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்த, சுறுசுறுப்பை இழந்த, கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்றார் பெயரில் அனுமதித்து தன்னைத் தானே பாழ்படுத்திக் கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டிய உலகாதாயம்(Materialism). மற்றொன்று அதற்க்கு நேர் மாறான வடி கட்டிய மூட நம்பிக்கை .
இன்றைய இளைஞன் மேலை நட்டு கல்வி பெற்றவுடன் தன்னை எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக் கொள்கிறான். நமது புராதன ரிஷிகளைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரிக்கிறான் அவனுக்கு இந்துச் சிந்தனை எல்லாம் வெறும் குப்பை , தத்துவம் எல்லாம் குழந்தைகளின் வெறும் உளறல், மதம் என்பது முட்டாள்களின் மூட நம்பிக்கை.
இதற்க்கு மாறாக இன்னொருவன் இருக்கிறான், அவன் கல்வி அறிவு பெற்றவன், ஆனால் ஒன்றைப் பற்றிக் கொண்டு அதுதான் சரி என்றுசாதிப்பவன் அவன். சகுனம் (என்று சொல்லப் படும் நிகழ்வு) களுக்கு கூட அது இது என்று விளக்கங்கள் தருகிற மற்றொரு எல்லையை நோக்கி ஓடுகிறான் அவன்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கை உடைய முட்டாள்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்.
ஏனெனில் நாத்தீகனிடம் உயிர்த் துடிப்பு இருக்கிறது. அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய் விடுகிறது. மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து விடுங்கள்.
Title: மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன் – சுவாமி விவேகானந்தர் சாட்டை!
2 Responses to "மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட, நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன் – சுவாமி விவேகானந்தர் சாட்டை!"

ரொக்கெட்டே விண்வெளிக்கு அனுப்பினாலும் கீழே இரண்டு எலுமிச்சை பழம் வைத்து அனுப்புபவன்தான் உண்மையான தமிழன். விஞ்ஞானிகள் என்று தம்மை அழைப்பவர்கள் கூட தமது விஞ்ஞான அறிவுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல், மூட நம்பிக்கைச் சேற்றை தமது முகத்தில் பூசிக் கொள்கின்றார்கள் .
அண்மையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக் சி.ஜி 820 புதிய ஹெலிகொப்டரை கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர் ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தபோது, புதிய வாகனங்களுக்குப் பூஜை போடும்போது சில்லுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதுபோல ஹெலிகொப்டரின் கீழ் எலுமிச்சம் பழங்கள் வைத்து நசுக்கப்பட்டன.
புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகப் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார். அதன்பின் ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன் தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து ஜி.எஸ்.எல்.வி. பி 3 ரொக்கெட்டுக்கான திட்டத்தை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார். திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.
விண்வெளிக்கு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட்டோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ரொக்கெட்டின் கிரையோஜெனிக் இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ரொக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துப் பயன் இல்லை என்று நேர்மையாக நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவில்லை.
நல்லையா தயாபரன்

1 | thiruchchikkaaran
January 28, 2011 at 9:27 am
அன்புக்குரிய சகோதரர்களே,
உங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் நாம் வரவேற்கிறோம். அதே நேரம் கட்டுரைக்கு தொடர்பான பின்னூட்டங்களை பதிவு இடுமாறு கோருகிறோம்.
நம்முடைய தளம் சமத்துவத்தில், சமரசத்தில் , நல்லிணக்கத்தில் மக்களை நாகரீக சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் தளமாகும். எனவே சாதி வெறிக் கருத்துக்களை ,சாதி வெறுப்புணர்ச்சியை தூண்டும் கருத்துக்களை, பிற மத தெய்வங்களை இகழ்ந்து வெறுப்புணர்ச்சி கக்கும் கருத்துக்களை நாம் ஆதரிக்க இயலாது.
அதே போல ஆபாசக் கருத்தக்களையும் நாம் வெளியிட இயலாது. வன்முறையை தூண்டும் கருத்துக்களையோ, மக்கள் விரோத கருத்துக்க்களையோ நாம் வெளியிட இயலாது.
நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு சமத்துவ, சமரச நல்லிணக்க பாதையில் இணையுமாறு கோருகிறோம்.