Thiruchchikkaaran's Blog

கண்ணகி!

Posted on: June 24, 2010


 
File:Statue of Kannagi.jpg
      

 ஒரு மொழியின்  தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று அந்த மொழியைப் பேசும் சமுதாயத்தின் பண்பாடே. தமிழ் சமுதாயப் பண்பாட்டின் முக்கிய நாயகி கண்ணகி என்று சொன்னால் அது மிகை அல்ல.

கண்ணகியின் சிறப்பை அவ்வளவு எளிதில் விவரிக்க முடியாது.  கண்ணகியின் சிறப்பை விளக்கு முன் கோவலனின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக்  குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன். 

ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான். அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை. யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும். அதனால் நல்லவர்கள் கூட அவனை  விட்டு விலகி விட்டனர்.

 யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன  நிலையிலும் அவன் இல்லை. உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான். வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது, தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான், நம்பிக்கையை இழந்து விட்டான்.  உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.

ஆனால் அந்த நிலையிலும் அவனைக்  கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால்  அதிகம் பாதிக்கப் பட்டவள். அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை,அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும்  கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள்.  உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம். 

கற்ப்புக்கரசி கண்ணகி, அவளின் குழந்தைகளாகிய  நம் அனைவரின் தெய்வம்!

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காவிய நாயகி கண்ணகியை வணங்க, அவளது கொள்கையினை நினைவு கூற நாம் தயங்கவே வேண்டியதில்லை நண்பர்களே. 

ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணிடமும் ஒரு கண்ணகி இருக்கிறாள்.  ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தன கணவனுக்கு முடிந்த அளவு உதவி செய்கிறாள்.  ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் வணக்கத்துக்கு உரியவரே! 

கண்ணகியின் புகழ் வாழ்க! அவருடைய கொள்கைகள் நம்மை வழி நடத்திச் செல்லட்டும்.  அவருடைய வாழ்க்கையே நாம் படிக்கும் பாடம்.

வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்,

 மானுடரின் மனதினிலே மறக்கவொன்னா  வேதம்!

Advertisements

11 Responses to "கண்ணகி!"

/ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணிடமும் ஒரு கண்ணகி இருக்கிறாள். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தன கணவனுக்கு முடிந்த அளவு உதவி செய்கிறாள். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் வணக்கத்துக்கு உரியவரே/
அருமையான கட்டுரை.வணங்குவோம் நம் அன்னை கண்ணகியை

அன்புக்குரிய நண்பர் சந்தானம் அவர்களே,

மிக்க நன்றி!

திருச்சிக்காரன்,
தங்களை எதிர்த்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், நம் இருவரது எண்ணங்களும் நிறைய வேறுபடுகிறது. தமிழ் பற்றுடைய பலரும் என் மீது கோவப்படலாம் இந்த பின்னூட்டத்தை பார்த்து.
கண்ணகியிடம் அப்படி என்ன சிறப்பிருக்கிறது? தன் வாழ்க்கைதுனைவன் வழிதவறி போகும்போது, அந்த தவறை சுட்டிக்காட்டாதபோது, அவனை திருத்த முயலாதபோது அவள் என்ன நல்ல வாழ்க்கைத்துணைவி?
மன்னன் செய்த தவறுக்கு, அவன் நகரத்தையே எதற்கு தண்டிக்க வேண்டும். இது தாயுல்லமா? மேலும், தவறிழைத்த மன்னன் அந்த இடத்திலேயே உயிர்விட்டான். மதுரை மாநகரை, அழிக்கும் வல்லமை உள்ள அவள் கற்பு, கோவலனை உயிர்ப்பிக்க செய்து இருக்கலாமே?
கற்பென்ற உயர்பண்பு, ஒரு அழிவிலா சிறப்பு பெறவேண்டும்?
கண்ணகியின் வாழ்வில் இருந்து, ஒரு சராசரி தமிழ்பெண் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
கோவலனின் தவறுகளுக்கு பதிபக்தி என்ற பெயரில் துணை போனதையும், மதுரையை எரித்ததும் பாராட்டுக்குரிய செயலா?
வீரமாக ஒரு மன்னனை எதிர்த்து நின்றதை பாராட்டலாம். இந்த வீரம் நம் பெண்களுக்கும் வேண்டும்.
திருந்திய தன் கணவனை மனதார ஏற்றால், அது மிக அற்ப்புதமான செயல். ஆனால், மற்றெந்த வகையிலும் கண்ணகி என்ற கற்பனை பாத்திரம் நம் மனதில் நிற்கவில்லை.
Hard Truth

//தமிழ் சமுதாயப் பண்பாட்டின் முக்கிய நாயகி கண்ணகி என்று சொன்னால் அது மிகை அல்ல.//

மன்னிக்கவும் திருச்சிக்காரன்,
தங்கள் கருத்தில் இருந்து நான் வேறுபடுகிறேன். கண்ணகி, சிலப்பதிகாரத்தின் முக்கிய நாயகி கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால், அது கண்ணகியின் பெயர் கொண்டிருக்கும் (உம்: கண்ணகிகாவியம்). நமது பள்ளிகளில் சிலப்பதிகாரம் சொல்லிக்கொடுக்கும் பொது கூட, சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை அறியும்போது கண்ணகி முக்கிய பாத்திரமல்ல என்றே அறிகிறோம்.

// வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காவிய நாயகி கண்ணகியை வணங்க, அவளது கொள்கையினை நினைவு கூற நாம் தயங்கவே வேண்டியதில்லை நண்பர்களே. //
கண்ணகி வாழ்வாங்கு வாழ்தவர்களில் ஒருவர் அல்ல என்பதே சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த அறிஞர்கள் கூற்று.
மேலும் கண்ணகியின் கொள்கைதான் என்ன?

//நம் அனைவரின் தெய்வம்!//
இந்த “நம்”மில் யாரெல்லாம் அடக்கம்? எப்படி நீங்கள் இந்த ஆபிரகாமியர்களை போல், அடுத்தவர் “தெய்வத்தை” நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?

//ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணிடமும் ஒரு கண்ணகி இருக்கிறாள். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தன கணவனுக்கு முடிந்த அளவு உதவி செய்கிறாள். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் வணக்கத்துக்கு உரியவரே! //
வார்த்தைகளில் நிதானம் தேவை நண்பரே. வெறுமனே இப்படி பொதுப்படையாக கூறக்கூடாது. அனைத்து தமிழ் பெண்களுக்கும் தாங்கள் எப்படி உத்திரவாதம் குடுக்கமுடியும்? மேலும் ஒரு பெண்ணுக்குள் கண்ணகி இருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா?

மேலும், ஒரே ஒரு கேள்வி, கண்ணகியால் விளைந்த நன்மை என்ன? நண்பர் Hard Truth போலவே எனக்கும் இந்த கேள்வி உண்டு.
நன்றி,
இராமன்

அன்புள்ள திருச்சிக்காரருக்கு, உங்களுடைய ‘கண்ணகி’பற்றிய கருத்துரை கண்டேன். எனக்கென்னவோ மாதவி என்றால் மென்மைப் பைவமும் கண்ணகி என்றால் வன்மைப் படிவமும் மனத்தில் தோன்றுகின்றன. கோவலன்,’ குன்றம் அன்னகுன்றாச் செல்வம் தொலைத்தது நாணுத் தருகின்றது’ என்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து சொன்னான். அப்பொழுது குன்று போனால் போகட்டும் ‘சிலம்புளது கொண்ம்’ என்று தன்னுடைய சிலம்பைத் த்ருகிறாள்.(குன்று , சிலம்பு இரண்டும் மலை என்னும் பொருளன). அப்பொழுதுகண்ணகி தன்னுடைய மனத்தில் கோவலன் மாதவிக்குக் கொடுக்கத் தன்னிடத்தில் பொருள் இல்லை என்று வருந்துகின்றான் என்று நினைத்துத் தான் அவ்வாறு கூறினாள். சங்ககாலச் சமுதாயம் மனைவிக்கு ஊடிப் பிணங்கும் உரிமையக் கொடுத்திருந்தது. ஊடிப் பிணங்குவதால், பரத்தமையை ஏற்றுக் கொண்டிருந்த சமுதாயத்தில் மனைவியர் கணவனைத் தன் வசம் கட்டுண்டு கிடக்குமாறு வைத்திருக்க முடிந்தது. “ஊடுதல் காமத்துக்கு இன்பம்” எனவே , இருவகைப் பயன்கள் மகளிர்க்கு ஊடுதலால் கிடைத்தன. மாதவி இதனை அறிந்திருந்தாள். ஊடுதலும் கூடுதலும் கோவலனுக்கு அளித்தாள். அதோடு, கோவலன் வணிகக் குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் ஒரு சிறந்த கலைஞன்; கவிஞன். இது அவன் பேசிய உலவாக்கட்டுரையிலும் கானல்வரிப் பாடல்களிலும் தெளிவாகின்றது. அவனுடைய கலை உள்ளத்திற்குத் தேவையான உணவு மாதவியிடமே கிடைத்தது. அதனால் அவன் விடுதல் அறியாக் காதலுடன் மாதவியோடு இருந்தான். கண்ணகி கணவனுடைய புறத்தை அறிவாளே அன்றி அகத்தை அறியவில்லை. அறிந்திருந்தாலும் அவனுடைய அகத்தைத் தன்பால் ஈர்த்து வைத்திருக்கத் தேவையான தகுதி ஆற்றல்களையும் பெற்றிருக்க வில்லை. அவள் ஒரு சாதாரணப் பெண்ணாகவே இருந்தாள். தேவந்தி , மாசாத்தன் கோவிலில் வழிபட்டால் கணவன் கிடைப்பான் என்று கூறியபோது, கண்னகி,”பீடன்று” என்று கூறியது, ‘தெய்வந்தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்” என்று தெய்வப்புலவர் கூறியதற்கு ஏற்ப அமைந்த கற்பு எனச் சிலர் வியப்பர். அவள் அவ்வாறு கூறியதற்கு அவள் சார்ந்திருந்த ஆசீவக சமயமே காரணம். விதிக்கோட்பாட்டைப் பெரிதும் வலியுறுத்திய மதம் அவளுடைய மனத்தை அவ்வாறு திடப்படுத்தி, விதி அப்படியிருந்தால் அவன் வருவான் என்னும் பொருளில், வழிபடுதலாகிய செயல் ‘பீடன்று’ என்றாள். கோவலன் பன்முகத்திறன் கொண்டவன். அவனுடைய உள்ளத்தை ஈர்க்கும் திறன் கண்னகியிடம் எதுவும் இருக்கவில்லை. அவன் எதிர்பார்த்தவை அனைத்தும் மாதவியிடம் இருந்தன. எனவே அவன் ஆதையிடம் வாழ்ந்தான். இக்காலத் தமிழ்ப் பெண்கள் மாதவிபோல பல்திறம் பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறுவர். கண்ணகிபோல இருந்தால் அவளைப்போலவே தாமும் துன்பப்பட்டுத் தன்னைசார்ந்தவரையும் துன்பப்படச் செய்வர்.

அருமையான பின்னூட்டம் திரு.முத்துகுமாரசாமி அவர்களே. வாழ்த்துக்கள்.
இராமன்

திரு.முத்துக்குமாரசாமி அவர்களே,

இந்து மதம் மற்றும்,தமிழ் இலக்கியங்களில் உங்கள் புலமை மிகுந்த கட்டுரைகள், பதில்கள் போன்றவற்றை தமிழ் ஹிந்துவில் படித்து வியப்படைந்திருக்கிறேன்.உங்கள் பதில் நன்றாக உள்ளது.

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய முனைவர் ஐயா அவர்களே,

கண்ணகி கட்டுரைக்கு நீங்கள் வழங்கிய கருத்துக்கள் மிகவும் சிறப்பான வகையிலே புதிய கோணத்திலே விளக்குவதாக அமைந்து உள்ளது.

மாதவி அனைவரும் வியக்கும் வண்ணம் பல கலைகளிலும் சிறந்து விளங்கியவர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளீர்கள். அப்படிப்பட்ட ஆற்றல் பல பெற்ற பெண்களை அனைவரும் வியப்போடு நோக்குவர் என்பது உண்மையே.

உங்கள் கருத்தைப் பற்றி சொல்லிய போது, சில பெண்களும் அதை சரியென சொல்லி, பெண்கள் பல்கலை வல்லுனராகத் திகழ்வது நல்லதே என்ற வகையிலே சொன்னார்கள் . நீங்கள் நமது தளத்தின் கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய கருத்துக்களினால் கிடைத்த புதிய கோணத்தை வைத்து மாதவி, கண்ணகி ஆகியோரைப் பற்றிய புதிய கட்டுரை நம்முடைய தளத்திலே வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்து பதிவு செய்த, இராமன், தனபால், Hard truth உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நம் நன்றிகள்.

திரு இராமன் அவர்களே,

/// கண்ணகி, சிலப்பதிகாரத்தின் முக்கிய நாயகி கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால், அது கண்ணகியின் பெயர் கொண்டிருக்கும் (உம்: கண்ணகிகாவியம்). நமது பள்ளிகளில் சிலப்பதிகாரம் சொல்லிக்கொடுக்கும் பொது கூட, சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை அறியும்போது கண்ணகி முக்கிய பாத்திரமல்ல என்றே அறிகிறோம்.///

கண்ணகி கோவலனுக்குக் கொடுத்த சிலம்பு.அந்த சிலம்பை விற்க்கச் சென்றபோது, அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனின் தண்டனையால் உயிர் துறந்தான்.அதை அறிந்த கண்ணகி தன சிலம்பை உடைத்து கோவலன் குற்றமற்றவன் என்று நிரூபிக்கிறாள்.சிலப்பதிகாரத்தின் முக்கிய, மற்றும் உச்சகட்டமே இந்த நிகழ்வுகள் தான்.அதனால் கண்ணகிக்கும் முக்கிய இடம் உண்டு.

மேலும் சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணமே சிலம்பை வைத்துத் தான்.அந்த சிலம்பு பாண்டிய நாட்டு அரசியுடைய சிலம்பைவிட கண்ணகியின் சிலம்பு தான் இங்கு முக்கிய இடம் பெறுகிறது.அதனால் ///கண்ணகி, சிலப்பதிகாரத்தின் முக்கிய நாயகி கூட கிடையாது.///என்று கூறுவது சரியில்லை என்றே கருதுகிறேன்.

///அப்படி இருந்திருந்தால், அது கண்ணகியின் பெயர் கொண்டிருக்கும் (உம்: கண்ணகிகாவியம்)///

அது தான் கண்ணகி கோவலனுக்கு கொடுத்த சிலம்பு,கண்ணகி உடைத்த சிலம்பு.இப்படி கண்ணகியின் சிலம்பை மையமாக வைத்தே இந்த சிலம்பையே பெயராக வைத்தே “சிலப்பதிகாரம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.இது “கண்ணகிகாவியம்” என்பதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல.

இந்த சிலப்பதிகாரம் என்பதின் பெயர்க்காரணம் கோவலன்,மாதவி, போன்றோரைவிட கண்ணகியையே குறிப்பிடுகிறது என்பதையையும் தெரியப் படுத்த விரும்புகிறேன்.

வீம்பு வாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் சிலப்பதிகாரத்தை பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். நான் என் கருத்தை வெளிப்படுத்தினேன், அவ்வளவே.
நன்றி,
இராமன்

கோவலன் போன்ற பொறம்போக்கு கணவன்களை விஷம் வைத்து கொள்ளமல் அவன் ஊதாரிதனதுக்கு சிலம்பை வேறு கொடுத்ததால் கர்ப்புகரசியாம் . அதை பற்றியே சர்ச்சை வேறு ரொம்ப முக்கியம் நாட்டுக்கு …உருப்படுமா இந்த நாடு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: