Thiruchchikkaaran's Blog

அன்று கபந்தனின் பிடியில் இருந்து மீண்ட இராம, லக்ஷ்மணர்கள் , இன்று கருங்காலிகளின் பிடியில் இருந்து விடுபடுவார்களா?

Posted on: May 15, 2010


Title:அன்று கபந்தனின்  பிடியில் இருந்து மீண்ட இராம, லக்ஷ்மணர்கள்,  இன்று கருங்காலிகளின்  பிடியில் இருந்து விடுபடுவார்களா? 

மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் இன்னல்களை ஏற்று வாழ்ந்த இராமன், தனக்கு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், கையறு நிலை ஏற்ப்பட்டாலும் தன்னுடைய கொள்கையில் இருந்து மாறாமாலும், தவறான வழிக்கு செல்லாமலும் இருந்து இருக்கிறார் என்பதை   தியாகராசர், துராத்முலகு பூ கிராத குல ஜேர ராத னுசு சுந்தரா கார நீ,  என்று பாடி இருக்கிறார். 

 இராமனின் வாழ்க்கை முழுவதும் கிட்டத்தட்ட துன்ப வாழ்க்கையாகவே இருக்கிறது.  இளம் பருவத்திலே விசுவாமித்திர முனிவருடைய வேள்வியைக் காக்க காட்டுக்குப் போய்,  தாடகை முதலிய சாடிஸ்ட் அரக்க கும்பலை எதிர்த்துப் போரிட்டு இருக்கிறார்கள்.

 பிறகு சிற்றன்னையான  கைகேயியின் விருப்பப் படி காட்டுக்குப் போய் பல வருடம் அங்கே மரவுரி  உடுத்தி, கிழங்குகளை தின்று கொடிய விலங்கு களுக்கு  மத்தியிலே வாழ வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கிறது.

அவருடைய வாழ்க்கையிலே பல காட்டாறுகள் குறுக்கிட்டன. படமெடுத்தாடும் பாம்புகளுக்கு நடுவிலே தான் வாழ்ந்திருக்கிறார்கள்.    

அவர்கள் காட்டிலே சந்திந்த வினோத அரக்கர்களில் ஒருவன் கபந்தன்.  அவன் இராமர் இலட்சுமணன் இருவரையும் இரு கைகளில் தூக்கி விடுகிறான். அவர்களை வாயில் போட்டு விழுங்கவும் முயற்ச்சி செய்கிறான். செய்வதறியாது  திகைக்கும் அவர்கள், தங்கள் வாளால் ஒரே நேரத்தில் அவனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றனர். வெட்டுப்பட்ட கைகள் கீழே விழும்போது, அவற்றின் பிடியில் அழுத்தம் குறைந்ததால் , இராமரும், இலட்சுமணனும் தப்பிக்கின்றனர்.

இராமரின் வாழ்க்கையும், கொள்கையும் பலராலும் சிறப்பாக விளக்கப் பட்டும் பின்பற்றப் பட்டும் வந்தன. அவர்களில் முக்கியமாக,  வால்மீகி, கம்பர், துளசிதாஸ், ராமதாஸ், தியாகராஜர், காந்தி …. இப்படி பலரை சொல்லலாம். இவர்கள் இராமரின் கொள்கைகளை விளக்கியதோடு,  அந்தக் கொள்கைகளின் படியே எளிமையான தியாக  வாழ்க்கையை வாழ்ந்து மற்றவருக்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தனர்.

ஆனால் இன்றைய கால கட்டத்திலே இராமரின்  பெயரை  தங்களின் சட்ட விரோத செயல்களுக்கு பலர்  உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்திய நாட்டிலே வன்முறையாளர்கள் அரசியலைப்  போர்வையாக உபயோகிப்பது மக்கள் அறிந்ததே.  எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கரை  போட்ட ஆடையை அணிந்து அரசு அலுவலகங்களின், அதிகார சாளரங்களில் சுழ‌ல்வ‌தை நாம் பார்க்கிறோம். ஆனால் ஓரளவுக்கு மேல் அடாவடி அதிகரித்தால், அந்தக் கட்சி தலைவர்கள் தங்களின் கட்சியின் பெயரைக் காத்துக் கொள்ள அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள்.

ஆனால் இப்போது ஒரு புதிய டிரண்டு உருவாகியுள்ளது. அது என்னவென்றால் காவித் துணியைக் கழுத்தில் கட்டிக் கொண்டு இராமரின் பெயரையோ, அனுமனின் பெயரையோ வைத்துக் கொண்டு ஒரு லெட்டர் பேடு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியது. மக்களுக்கு இராமரின் மேல் இருக்கும் மரியாதையையும், இந்து மதத்தின் மீது இருக்கும் பற்றையும் முதலீடாக வைத்து பல வகையான அடாவடிகளையும் செய்ய வேண்டியது. இவர்களின் முக்கிய டார்கெட் வணிக நிறுவனங்களாகவே இருக்கும். காலாசாரத்தைக் காப்போம், அப்படி இப்படி என்று கடைகளை அடித்து நொறுக்கி, மார்க்கெட்டிலே தங்களின் ரவுடி இராச்சியத்தை நிறுவ முயல்கிறார்கள்.

இராமன் என்றால்  கம்பர், துளசிதாசர்,  தியாகராஜர், காந்தி போன்றவர்களின் நினவு வருவது மாறி  ,  யார் வேண்டுமானாலும் இராமரின் பெயரைப் போட்டு , படத்தைப் போட்டு அடாவடி செய்யலாம் என்று ஆகி விட்டது. முன்பு இராமருக்கு இக்கட்டான கையறு நிலை உருவான போது, அனுமன் வந்து அவருக்கு உதவி அவரை  அந்த இன்னலில்  இருந்து மீட்டு இருக்கிறார். இப்போது இந்த சிக்கலில் இருந்து இராமரை யாரவது மீட்பார்களா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

13 Responses to "அன்று கபந்தனின் பிடியில் இருந்து மீண்ட இராம, லக்ஷ்மணர்கள் , இன்று கருங்காலிகளின் பிடியில் இருந்து விடுபடுவார்களா?"

என் கருத்து முரண்படுகிறது என்பதை கூற கடமைப்பட்டுள்ளேன்! இராமர் மாமிசம் உண்டார், மது அருந்தினார், தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் ஒரு தைரியமற்றவர் என்பது பகுத்தறிவால நூல்களிலிருந்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று! தான் கொண்ட மனைவியையே சந்தேகம் அடைந்ததும் கம்ப புரானத்திலிருந்தே அறியலாம். மேலும் கம்பரின் மகிமை அண்ணாவின் கம்பரசம் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இராமரே ஒரு எடுத்துக்கட்டாக வாழாதபோது அதனை மறைத்து இராமனின் பாதையில் வாழ்க்கை அல்லது அரசியல் என்று சொல்பவர்கள் எவ்ளவு முட்டாள்களாக இருப்பார்கள்! வாழ்க இராமபுராணம் !

அன்பு சகோதரர் வி.பி. மறவன் அவர்களே,

கட்டுரையைப் படித்து உங்களின் மேலான கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நீங்கள் கூறிய கருத்துக்களை பற்றி ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

//இராமர் மாமிசம் உண்டார்//

அக்காலம் முதல் இன்று வரை பெரும்பாலான மக்கள் மாமிச உணவு உட்கொள்ளுகின்றனர். இராமர் உட்கொண்ட உணவு பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. அவர் மாமிச உணவு உண்டிருக்கக் கூடும், உண்ணாமலும் இருந்திருக்கக் கூடும். மாமிச உணவு உண்பது குற்றமான ஒரு செயல் என நீங்கள் கருதுகிறீர்களா?

// மது அருந்தினார் //

என்னுடைய முயற்சிக்கு எட்டிய வரையிலே நான் தேடிப் பார்த்து விட்டேன், இராமர் குடிப் பழக்கம் உடையவராக இருந்தார் என்பது பற்றிய சிறு குறிப்பு கூட எனக்கு கிடைக்கவில்லை. இது விடயமாக நான் மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்திலே என்னால் முடிந்த வரையில் தேடித் பார்த்து விட்டேன். எனக்கு தெரிந்த வரையில் அவ்வாறு இல்லை. மற்ற இராமயணங்களிலும் நான் தேடிப் பார்த்து இருக்கிறேன், என்னுடைய முயற்ச்சிக்கு எட்டிய வரையில் இல்லை.

குடிப் பழக்கம் உடையவராக இருந்தால் சுவையான மதுவை அருந்திப் பழகிய ஒருவர் உல்லாச வாழக்கையை விட்டு காட்டுக்குப் போக அவர் மனம் ஒப்புமா? ஆட்சியிலே இல்லாவிட்டாலும், அரண்மனை வாழ்க்கையையும் , மது அருந்தும் உல்லாசத்தையுமாவது அனுபவிக்கும் பொருட்டு இராமர் அயோத்தியிலே இருந்திருக்கவே முயற்சி செய்து இருக்க வேண்டும். காட்டுக்குப் போக வேண்டும் என்ற சொன்னவுடன் உடனடியாக சம்மதம் தெரிவித்தது இராமர் டி டோடலராக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

//தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் ஒரு தைரியமற்றவர்//

இராமர் மனத் தளர்ச்சி அடைந்த தருணங்கள் இரண்டு , ஒன்று சீதை காணாமல் போன நேரம், இரண்டாவது போர்க்களத்தில் இலக்குவன் மரணமடையும் நிலையை அடைந்த நேரம்.

தன்னுடைய சொந்த நகரத்தை விட்டு வனப் பகுதியில் யாரும் உதவிக்கு இல்லாத கையறு நிலையிலே தன் மனைவியைக் காணாமல் தடுமாறி இருக்கிறார். நாட்டிலே இருக்கும் போது, மனைவியைக் காணவில்லை என்றால், அக்கம் பக்கத்திலே விசாரிக்கலாம், உறவினர்களின் துணையை நாடலாம். காவல் துறையின் உதவியை நாடலாம். மனைவி தேடிக் கண்டு பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

காட்டிலே மக்களுமில்லை. சமூகமும் இல்லை, நண்பர்களோ, உறவினர் கூட்டமோ இல்லை. அரசாங்கமோ, காவல் துறையோ இல்லை. மரங்களும், விலங்குகளும், பறைவைகளும் மட்டுமே நிறைந்த திக்குத் தெரியாத காட்டிலே மனைவியைக் காணாமல் தடுமாறி இருக்கிறார். அந்தக் கையறு நிலை , தற்கொலை முயற்ச்சி என்பதை விட விரக்தி என்பதே பொருத்தம். நான் கூட என் தந்தை இறந்த பொது, இனி நான் உயிர் வாழவே முடியாது என்று அழுதேன். அதை நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொருள் கொள்ளலாகாது.

மற்றபடி இராமர் மனைவியை சந்தேகப் பட்டதாக சொல்லப் படும் நிகழ்வு, சீதையின் அக்கினிப் பரீட்சை, இராமர் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பியது ஆகியவை பற்றிய கட்டுரைகள் நம்முடைய தளத்திலே வெளியாகும். நீங்கள் அதையும் படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு கோருகிறேன்.

மற்றபடி இராமருடைய கொள்கைகள, அவர் வாழ்க்கையிலே சந்தித்த சவால்கள், அவர் அதனை பொறுமையுடன் எதிர் கொண்ட விதம் ஆகியவை மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என நான் கருதுவதாலேயே அவற்றைப் பற்றி எழுதுகிறோமேயல்லாது, மற்ற வகையிலே இராமரை உயர்வு படுத்திக்க காட்டுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வாழ்க்கையில் ஒரு கால கட்டத்திலே இராமரை விமரிசித்து வந்தவன்தான் நான்.

உங்களுடைய விமரிசனங்களை வரவேற்கிறேன். இராமரின் கொள்கையோ , செயல்பாடோ தவாறாக இருந்திருக்கும் பட்சத்திலே நான் அவரை பற்றி எழுதுவதை நிறுத்தி விடுவேன், அல்லது மறுபடியும் அவரைப் பற்றி விமரிசிப்பேன்.

இராமரின் மீது விமரிசனங்களை வைக்கலாம். இராமரே அவருடைய வாழ்நாளிலே அவர் மீது வைக்கப் பட்ட விமரிசனங்களை பொறுமையோடு ஏற்றவரே அன்றி அப்படி விமரிசித்தவர் மீது கடுமை காட்டவில்லை.

//பகுத்தறிவால நூல்களிலிருந்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று! //

நம்முடைய தளமும் முழுமையான பகுத்தறிவு தளமே. நாம் நேர்மையான பகுத்தறிவாளர். இராமரின் வாழ்க்கையையும், கொள்கையையும், இராமாயணம் முழுவதையுமே நாம் பகுத்தறிவு ஆராய்ச்சி அடிப்படையிலேயே அணுகுகிறோம்.

இராமரின் வாழ்க்கையிலே அவரோடு சமபந்தப் பட்ட தசரதர், சுமேந்திரர், கைகேயி, கோசலை, இலக்குவணன், சீதை, பரதன், குகன், அனுமன், நலன், குமுதன், நீலன், அங்கதன், வீபிடணன், ஜாம்பவான், இராவணன், இந்திரஜித் உள்ளிட்ட பலரும் அவரை மனிதர் என்ற நோக்கிலேயே அணுகி செயல்பட்டுள்ளனர். விசுவமித்திரர், சபரி, வால்மீகி உள்ளிட்ட மிகச் சிலரே அவரை கடவுள் என்கிற பார்வையிலே அணுகி உள்ளனர்.

இந்த அளவுக்கு நல்லவர், தியாகி, கொள்கைக்காக தியாகம் செய்தவர் அவருக்கு இவ்வளவு கஷ்டம் வந்துள்ளதே நாம் மனப் பூர்வமாக அவருக்கு உதவி அவருக்கு ஏற்பட்ட இன்னலை நீக்குவோம் என்கிற கருத்திலேயே குகன், அனுமன், ஜாம்பவான், நீலன் , அங்கதன் உள்ளிட்ட பலரும் இராமரி அணுகி உள்ளனர். நாமும் இராமரை கொள்கை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே அணுகி ஆராய்கிறோம்.

//அண்ணாவின் கம்பரசம் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. //

பள்ளி நாட்களிலே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிக்காக அண்ணாவின் பல நூல்களை பரிசாகப் பெற்று இருக்கிறேன். அவற்றை முழுதும் படித்தும் இருக்கிறேன். அண்ணாவின் எழுத்து நடை சுவையானது. ஆனால் கம்ப ரசம் என்னும் நூலை இது வரை நான் படிக்கவில்லை, படைத்த பிறகு அதைப் பற்றி எழுதுவதே சிறப்பு, இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை.

அதே நேரம் பொதுவாகவே எந்தப் புலவராக இருந்தாலும் சரி காளி தாசன் முதல், கண்ணதாசன் வரை பல புலவர்களும் விடாமல் எழுதும் ஒரு பொருள் சிருங்கார ரசம் எனப் படும் காதல். இதில் அவர்களை குறை சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனெனில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக காதல் அமைந்து இருக்கிறது. அந்தக் காதல் வரையரைக்குட்பட்டதாக , ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது அது இல்லறமாகிறது. ஒவ்வொரு இல்லறத்தவரின் வீட்டிலும், காதல் ரசமும், கம்ப ரசமும், காமத்துப் பாலும் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் தவறில்லை. நீங்கள் வயதில் இளையவர், திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். எனவே இதில் உங்களின் கவனத்தை அதிகம் வளர்க்க நான் விரும்பவில்லை.

தமிழ் இலக்கியங்களில் எத்தனையோ சிருங்கார ரசங்கள் இருக்கும் போது , கம்பரின் சிருங்காரத்தை மட்டும் அண்ணா எடுத்துக் கொண்டு கட்டம் கட்ட வேண்டிய வேண்டிய அவசியம் என்ன என்பதி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அண்ணா, பெரியார் உள்ளிட்ட பலரும், காங்கிரஸ், காந்தி, ஹிந்தி, இந்து மதம், பார்ப்பனீயம் ஆகியவற்றை எதிர்ப்பதை தங்களின் சமூக , அரசியல் தளத்தின் அடிப்படையாக அமைத்துக் கொண்டனர். காந்தி இராமரோடு கொள்கை மற்றும் உணர்வு பூர்வமாக தொடர்பு வைத்து இருந்ததால் இராமரை எதிர்ப்பது இவர்களின் பிரச்சாரத்துக்கு உதவியாக இருந்தது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வடவர், தென்னாட்டவர் என்கிற வேறுபாட்டில், மிகப் பெரிய வாக்கு வங்கியை அண்ணா தனக்கு உருவாக்கினார். எனவே இராமர் உத்தர பிரதேச பகுதியை சேர்ந்தவர் என்ற வகையிலே இராமரை எதிர்ப்பது அவர்களுக்கு பயன்பாடு உடையதாக இருந்தது. இதற்க்கு இந்த கம்ப இராமயணம் ஒரு இடைஞ்சலாக இருந்ததால் கம்பரின் மீது முழு விமரிசனத்தையும் வைக்க அண்ணா தயங்கவில்லை.

நீங்கள் பகுத்தறிவாளர் என்று குறிப்பிடும் அண்ணா அரசியல் பிரச்சாரத்துக்காக, வாக்கு வங்கியைக் குறி வைத்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதை தன்னுடைய முக்கிய பிரச்சார வாக்கியமாக வைத்து இருந்தார். “பகுத்தறிவாளரா”ன அண்ணா இந்த ஒருவனே தேவன் என்று குறிப்பிடும் தேவனை எங்கே சந்தித்தார்? மண்ணிலா, விண்ணிலா, பூலோக்கத்திலா, வைகுந்தத்திலா, பரலோகத்திலோ , கைலாயத்திலா, எங்கே தேவனை சந்தித்து விட்டு வந்து இங்கே இந்த பகுத்தறிவாளர் சாட்சி கொடுத்தார் என்பதை விளக்க முடியுமா? இவரின் சீடர்களும், கிண்டலும் , கேலிப் பேச்சுமாக பகுத்தறிவு காரர் போலக் காட்டி விட்டு, ஜோதிடர் அறிவுரைக் கேற்ப துண்டுகளின் நிறத்தை மாற்றுவதும், தங்க கோவிலுக்கு செல்வதுமாக பகுத்தறிவையே கேலிக் கூத்தாக்குகின்றனர்.

எனவே இவர்களின் பகுத்தறிவு சமூக, பொருளாதார , அரசியல் உயர்வுக்காக சந்தர்ப்பத்துக்கு ஏற்றார் போல எதை வேண்டுமானாலும் அழகான சொற்றொடர்களில் அடுக்கிக் கூறுவது என்பதாகத் தானே இருக்கிறது!

நாமோ எந்த விதமான சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் உண்மையை நோக்கிய பயணத்தில் பகுத்தறிவை உபயோகப் படுத்தி ஆராய்கிறோம்.

இவர்களின் காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலான சுயநலவாதத்தை பகுத்தறிவு என்று நம்புவது, கானல் நீரில் நீரெடுக்கப் போகலாம் என்று நினைத்த கதையாகவே இருக்கும்.

காமெடி பகுத்தறிவுக்கும், உண்மையான பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாமும் காமெடி பீசாகி விடுவோம்.

தனக்கு தேவை பட்டால், தன் எதிரிகளை சட்டத்துக்கு புறம்பாக, ஒரு கோழையை போல, பின்னால் ஒளிந்திருந்து தாக்கி கொல்லலாம் என்பதையும் ராமனிடமிருந்துதான் கற்றுக்கொண்டார்களோ?
Hard Truth.

எவனோ ஒருவன் ஏதோ பேசினான் என்பதற்காக தன் சொந்த மனைவியை எவனாவது சோதித்து பார்ப்பானா? இது அந்த பெண்ணுக்கு செய்கின்ற அவமானம் இல்லையா?
ஒரு தகப்பன் தன் மகள் நல்லவளா என்று சோதிக்க அவளை virginity test க்கு அனுப்பினால். அந்த மகள் அவனை செருப்பாலேயே அடிப்பாள். இப்படி சோதித்துதான் ஒருவரது கர்ப்பை நிரூபிக்க வேண்டுமானால், அதை போன்ற அவமானம் எங்கும் இல்லை. தகப்பன் மகள் உறவைவிட கணவன் மனைவி உறவு மேலானது அல்லவா? ராமனுடைய செயல் நியாயமா?

Hard Truth

திரு HARD TRUTH அவர்களே,
கற்பின் இலக்கணமாக சீதையை நாங்கள் போற்றுகிறோம்.

சீதை கற்ப்புடையவள் என்பது ராமர் நன்றாகவே அறிந்திருந்தார்.

சீதையின் கற்பைப் பற்றி மக்களுக்கு சிறிதளவும் சந்தேகம் ஏற்ப்படுவதைத் தவிர்க்கவே,அதை உலகுக்கு நிருபிக்கவே ராமர் சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார்

சீதை கற்ப்புடையவள் என்பதை ராமர் நான்றாக அறிந்த காரணத்தாலேயே ,சீதை தன் கற்பின் சக்தியால் அக்னியிலிருந்து மீண்டு உயிருடன் வருவார் என்று நன்றாக அறிந்த காரணத்தாலேயே,
சீதையின் கற்ப்பை உலககிற்கு நிருபிக்கவே ,சீதையின் கற்பின் மீது எந்த பழியும் எப்போதும் வரக்கூடாது என்பதற்காகவே “ராமன் சீதையின் கற்ப்பை சந்தேகித்து தீயில் தள்ளினான்’ என்ற பழியை ஏற்று சீதையை அக்னிப் பிரவேசம் செய்யுமாறுக் கூறினார்.

ராமர் சீதையின் கற்பைப் பற்றி சந்தேகப்பட்டு பரிசோதிக்க அகினியில் இறங்கச் சொல்லவில்லை.

சீதையின் கற்ப்பை பற்றிய சந்தேகம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்ப்படக் கூடாது என்பதற்காகவே,கற்ப்பை நிருபிக்கவே இவ்வாறு செய்தார்.

சீதையின் கற்பைப் பரிசோதிக்க அல்ல,சீதையின் கற்பை நிருபிக்கவே ராமர் இதை செய்தார்.

அதனாலேயே, ராமரின் இந்த செயலாலே,சீதையின் கற்பைப் பற்றி சிறிதளவும் சந்தேகம் கொள்ளாமல் ,சீதையை கற்பின் இலக்கணமாக போற்றுகிறோம்.

ராமர் அப்படி செய்திருக்காவிட்டால்,இப்பொழுது ராமரின் இந்த செயலை விமர்சிக்கும் உங்களைப்போன்றவர்கள்,சீதையின் கற்பைப் பற்றி விமர்சிக்கும் நிலை ஏற்ப்பட்டிருக்கும்.அப்படி ஒரு பழியை சீதைக்கு வராமல் காத்த அந்த ராமரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இராமரோ, காந்தியோ, புத்தரோ , இயேசுவோ….. யாராக இருந்தாலும், நாம் அவர்களின் கருத்துக்களை, கொள்கைகளை, செயல்பாட்டை ஆராய்ந்து அவற்றில் மனித சமூகத்துக்கு அவசியமானவை என்னென்ன, அவற்றில் உள்ள கருத்துக்களின் உண்மை, பகுத்தறிவின் அடிப்படையிலே உள்ளதா ஆகியவற்றை பகுத்தறிவின் அடிப்படையில் ஆராய்ந்து நம்முடைய பார்வையை முன் வைக்கிரோமேயல்லாது யாருடைய கருத்துக்கும், செயல் பாட்டுக்கும் நாம் பிளாங்கட் அப்ரூவல் (Blanket approval) அளிக்க இயலாது.

பல இன்னல்களை பொறுமையுடன் எதிர் கொண்டு தியாக வரலாறாக விளங்கும் இராமனின் மொத்த வாழ்க்கை யிலே வாலி வதம், சீதையை “சந்தேகப் பட்டது”, ஆகிய இரண்டு குற்றச் சாட்டுகள் வைக்கப் பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் நம்முடைய தளத்திலே வெளியாகும். அங்கே விவரமாக ஆராயலாம். இராமர் செய்தது தவறாக இருந்தால், அது தவறு என்றுதான் சொல்வேமேயல்லாது ,

“கடவுள் என்பதால் கம்ப்யூட்டரில் பைல்களை டிலீட் செய்வது போல , சுவாசம் உள்ள எல்லா உயிரையும் சங்க்க்காரித்து இனப் படுகொலை செய்வது சரிதான்” என்று சொல்வது போல சொல்ல, நாம் ஒன்றும் மத வெறியர் அல்லவே!

அன்புக்குரிய சகோதரர் தனபால் அவர்களே,

உங்கள் விளக்கத்தில் இருந்து நான் வேறுபடுகிறேன் . இராமர் சீதையின் மேல் சந்தேகப் படவும் இல்லை, தீக்குளிக்கச் சொல்லவும் இல்லை. நீங்கள் இராமயணத்தை சரியாகப் படித்தால் உண்மை உங்களுக்குப் புலனாகும். Any Way இதைப் பற்றிய தனிக் கட்டுரை வெளியாகும். We can discuss then.

திருச்சிக்காரர் அவர்களே,

//நீங்கள் இராமயணத்தை சரியாகப் படித்தால் உண்மை உங்களுக்குப் புலனாகும்.///

நீங்கள் கூறுவது சரிதான்,நான் முழுமையான, விரிவான, ராமாயணம் படித்ததில்லை,ஆனால் ராமாயணம் கதையை மட்டுமே கேட்டிருக்கிறேன்.மிகச் சிறிய அளவிலான இராமாயண புத்தகத்தையே படித்திருக்கிறேன்.

///உங்கள் விளக்கத்தில் இருந்து நான் வேறுபடுகிறேன் . இராமர் சீதையின் மேல் சந்தேகப் படவும் இல்லை, தீக்குளிக்கச் சொல்லவும் இல்லை///.

ராமர் சீதையை சந்தேகித்திருக்க முடியாது என்பதை நான் அறிவேன்.ஆனால் அவர் சீதையை தீக்குளிக்கச் செய்யவில்லை என்பது எனக்கு இதுவரை தெரியாது.என்னைப் போலே பலருக்கும் இது புதியதாகவும், மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.இவ்வளவு நாள் இந்த இராமாயண முக்கியமான நிகழ்வு எனக்குத் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் உள்ளது.

சீதை நெருப்பிலே இறங்கியது உண்மையா இல்லையா ?

சீதை நெருப்பில் இறங்கினார் என்று தெளிவாக சொல்லப் பட்டு உள்ளது. அது ஒரு முக்கிய குறிப்பே. நாம் இது பற்றி விவரமாக, தனிக் கட்டுரையாக எழுதுவோம்.

என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம் ! ஒரு பெண்ணின் கர்ப்பை நிரூபிககவா இந்த மூடத்தனம் !

I know who this Murugan is. Infact many who comes to this site would have guessed who this Murugan is. Right now, I am not saying that Murugan isso and so person, because for that also they will ask for material evidence.

Hard Truth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: